தமிழகத்தில் டெல்டா வகை கொரோனா பாதிப்புதான் அதிகம் டாக்டர் ராதாகிருஷ்ணன் தகவல்


தமிழகத்தில் டெல்டா வகை கொரோனா பாதிப்புதான் அதிகம் டாக்டர் ராதாகிருஷ்ணன் தகவல்
x
தினத்தந்தி 4 July 2021 4:00 AM GMT (Updated: 4 July 2021 4:00 AM GMT)

தமிழகத்தில் டெல்டா வகை கொரோனா பாதிப்புதான் அதிகம் என்ற சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், தஞ்சாவூரில் யாரும் முககவசம் அணிவதில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா புறநோயாளிகள் பிரிவில் இதுவரை ஒரு லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி சராசரியாக 1.6 லட்சம் மாதிரிகள் எடுக்கப்படுகிறது. அதில் 4 ஆயிரத்து 200 என்ற அளவில் பாதிப்பு குறைந்துள்ளது. எனவே, அறிவிக்கப்பட்ட தளர்வுகளை தொடரவேண்டுமானால், சமூக இடைவெளி, கைகழுவுதல், முககசவம் உள்ளிட்டவற்றை கட்டாயம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். கண்காணிப்பு பணிகளை மாவட்ட வாரியாக பிரித்து மேற்கொண்டு வருகிறோம். சிலர் கூறுவதுபோல, கொரோனா இறப்பை அரசு மறைக்கவில்லை.

டெல்டா பாதிப்பு அதிகம்

அரசின் சார்பில் வழங்கப்படும் இறப்புச் சான்றிதழில் இறப்புக்கான காரணம் குறிப்பிடப்படுவதில்லை. தனியார் ஆஸ்பத்திரிகளில் வழங்கப்படும் சான்றிதழில் இறப்பின் காரணம் மாற்றி எழுதப்பட்டிருந்தால் ஐ.சி.எம்.ஆர். விதிகளின்படி கட்டளை மையம் மூலம் திருத்திக்கொள்ளலாம். வரும் மாதங்களில் பொதுமக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு சதவீத அளவுக்குத்தான் கொரோனா பாதிப்பு உள்ளது. தஞ்சாவூரில் பொதுமக்கள் யாரும் முககவசம் அணிவதில்லை.

டெங்கை ஒழிக்க ஒத்துழைத்தது போல மக்கள் அரசோடு ஒத்துழைத்து கொரோனா நோயையும் ஒழிக்கவேண்டும். தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் பாதிப்பு 10 பேருக்குதான் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆயிரத்து 400-க்கு மேற்பட்ட மாதிரிகளை பரிசோதித்ததில், சென்னையில் 90 சதவீதம், தமிழகம் முழுவதும் 72 சதவீதம் டெல்டா வகை கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. டெல்டா வகை கொரோனா ஏப்ரல், மே மாதங்களிலேயே தமிழகத்தில் வந்துவிட்டது. கொரோனா நுண்கிருமி ஒரு மாதத்தில் 2 முறை உருமாறும்.

மாதந்தோறும் பரிசோதனை

அதனால் டெல்டா பிளஸ் வைரசுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கண்காணிக்காமல், அனைத்து வகையான உருமாற்றம் அடையும் கொரோனாவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் அல்லாமல், மாதந்தோறும் ஆயிரம் மாதிரிகளை பரிசோதனை செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து கண்காணிக்கிறோம்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 சதவீதம் அளவில் உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் மட்டும் 5 சதவீதத்துக்கு மேல் பாதிப்பு உள்ளது. கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story