இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு


இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
x

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர் அவர்களது வலைகளையும் அறுத்து கடலில் வீசியுள்ளனர்.

இலங்கை கடற்படை ரோந்து
ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன் தினம் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலில் விரித்திருந்த வலைகளையும் ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் கத்தியால் வெட்டி கடலில் வீசி எறிந்துள்ளனர். இதனால் நேற்று காலை அதிகமான படகுகள் மிகவும் குறைந்த அளவிலான மீன்களுடன் கரை திரும்பின.

மீன்பிடிக்க செல்லவில்லை
கடந்த 2 நாட்களாக தென் கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வலைகளை சேதப்படுத்தியுள்ளனர். இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலுக்கு பயந்து பாம்பன் விசைப்படகு மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தெற்குவாடி துறைமுக கடல் பகுதியில் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இது பற்றி ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா கூறியதாவது:-
இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் ராமேசுவரம் மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடிக்க முடியவில்லை. இது ஒரு புறமிருக்க, உயிரை பணையம் வைத்து மிகவும் கஷ்டப்பட்டு மீனவர்கள் பிடித்து வரக்கூடிய இறால் மீன்களுக்கு இதுவரையிலும் ஏற்றுமதி நிறுவனங்கள் உரிய விலையை நிர்ணயம் செய்யவில்லை.

நஷ்டம்
5 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு கிலோ இறால் மீன் ரூ.600 வரை விலை போனது. கடந்த 3 ஆண்டுகளாகவே ஏற்றுமதி நிறுவனங்கள் மீனவர்கள் பிடித்து வரக்கூடிய இறால் மீன்களுக்கு கிலோ ரூ.450 மட்டுமே விலை நிர்ணயம் செய்து வருகின்றன. தற்போது ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100ஐ எட்டியுள்ளது. எனவே ஒவ்வொரு படகிற்கும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதே நிலைமை நீடித்தால் மீனவர்கள் மீன்பிடி தொழிலையே முழுமையாக கைவிட்டு பசி பட்டினியுடன் தவிக்க நேரிடும்.எனவே, மத்திய மாநில அரசுகள் இலங்கை கடற்படையின் இடையூறு இல்லாமல் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும், மீனவர்கள் பிடித்து வரக்கூடிய இறால் மீன்களுக்கு ஏற்றுமதி நிறுவனங்கள் நல்ல விலையை நிர்ணயம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story