சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கக்கோரி கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம் 2-வது நாளாக உண்ணாவிரதம்


சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கக்கோரி கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம் 2-வது நாளாக உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 18 July 2021 9:05 PM GMT (Updated: 18 July 2021 9:05 PM GMT)

சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கக்கோரி மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சீர்காழி,

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதி வழங்கக்கோரி மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் கடற்கரையில் மீனவர்கள் நேற்று முன்தினம் குடும்பத்தோடு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று 2-வது நாளாக குடும்பத்தோடு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டம் காரணமாக மீனவர்களின் 30 விசைப்படகுகள், 300 பைபர் படகுகள் கடற்கரை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கடலில் இறங்கினர்

இந்தநிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் திடீரென எழுந்து அருகிலிருந்த கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கடலில் இறங்க முயன்ற மீனவர்களை தடுக்க முயன்றனர். ஆனால் இதை பொருட்படுத்தாத மீனவர்கள் கடலில் இறங்கி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனால் மீனவர்களை பாதுகாப்பாக கரைக்கு வருமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து சுமார் 30 நிமிடம் கழித்து மீனவர்கள் கரை திரும்பினர். அப்போது சில பெண்கள் மயங்கி விழுந்தனர். அவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story