சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் தமிழக அரசுக்கு, கமல்ஹாசன் வலியுறுத்தல்


சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் தமிழக அரசுக்கு, கமல்ஹாசன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 July 2021 9:18 PM GMT (Updated: 19 July 2021 9:18 PM GMT)

சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் தமிழக அரசுக்கு, கமல்ஹாசன் வலியுறுத்தல்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வெளிப்படையான அரசு நிர்வாகம், பங்கேற்பு ஜனநாயகம் ஆகியவை மக்கள் நீதி மய்யம் தொடங்கிய நாளில் இருந்தே நாங்கள் வலியுறுத்தி வரும் அம்சங்கள். சட்டமன்றத்தின் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வது மக்கள் பிரதிநிதிகள் பொதுப்பிரச்சினைகள் மீது நிகழ்த்தும் விவாதங்களைச் சாமானியனும் அறிந்துகொள்ள உதவக்கூடியது. சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் எனக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கை அ.தி.மு.க. அரசு சாக்குப்போக்கு சொல்லி நிலுவையில் போட்டுவிட்டது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வோம் என தன் தேர்தல் வாக்குறுதியில் (வாக்குறுதி எண்:375) தி.மு.க. அறிவித்திருந்தது. ஆனாலும், முதல் சட்டமன்ற கூட்டத் தொடரின் கவர்னர் உரையின் முழு நிகழ்வையும் நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அதிகளவில் ஊடகவியலாளர்கள் சட்டமன்ற வளாகத்தில் கூடுவதை இந்த நேரடி ஒளிபரப்பு குறைக்கக்கூடும். தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தமிழகத்துக்கு இணையவழி நேரடி ஒளிபரப்பு செய்வது ஒரு சவாலான விஷயமாக இருக்காது. தங்கள் தேர்தல் வாக்குறுதியில் உறுதியளித்திருந்த நேரடி ஒளிபரப்பை இந்த பட்ஜெட் தொடரிலேயே உறுதி செய்ய ஆவன செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story