கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு அதிகரிப்பு


கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு அதிகரிப்பு
x
தினத்தந்தி 24 July 2021 7:33 AM GMT (Updated: 24 July 2021 8:22 AM GMT)

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு வெகுவாக உயர்ந்துள்ளது.

தர்மபுரி,

கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து, தமிழகத்தை ஒட்டிய கர்நாடகா மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு கடந்த மாதம் முதல் கட்டமாக 12 ஆயிரம் கன அடி நீரும், கடந்த 15 ஆம் தேதி 21 ஆயிரம் கன அடி நீரும் திறந்து விடப்பட்டது. இதனை தொடர்ந்து 3-ம் கட்டமாக நேற்று முன்தினம் 37 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. அந்த நீர் இன்று தமிழக எல்லையான தர்மபுரி மாவட்டம் பிலிகுண்டுலுவை வந்தடைந்துள்ளது. 

கடந்த 3 நாட்களாக 7 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே வந்துகொண்டிருந்த நிலையில், இன்று 17 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது ஒகேனக்கலில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தமிழகத்திற்கு இன்று திறந்து விடப்பட்டுள்ள நீர் நாளை காலை மேட்டூர் அணையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story