தமிழகத்துக்கும், தமிழினத்துக்கும் பெரும் பங்காற்றியவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ என்ற பெயரில் விருது மு.க.ஸ்டாலின் உத்தரவு


தமிழகத்துக்கும், தமிழினத்துக்கும் பெரும் பங்காற்றியவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ என்ற பெயரில் விருது மு.க.ஸ்டாலின் உத்தரவு
x

தமிழகத்துக்கும், தமிழினத்துக்கும் பெரும் பங்காற்றியவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற தி.மு.க., தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தலைமைச் செயலாளர் இறையன்பு, அனைத்து துறை செயலாளர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.

“தகைசால் தமிழர்” விருது

இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை கவுரவிக்கும் வகையில், விருது மற்றும் பரிசுத் தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி, “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுக்குரியவர்களை அடையாளம் காண்பதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட இருக்கிறது. இந்த குழுவால் தேர்வு செய்யப்படுபவருக்கு சுதந்திர தினத்தன்று “தகைசால் தமிழர்” விருது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும். மேலும், ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட இருக்கிறது.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

குழு அமைப்பு

தமிழ்நாட்டிற்கும்,தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, “தகைசால்தமிழர்’’ என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

மேற்படி விருதிற்கானவிருதாளரைத் தேர்வு செய்யும் பொருட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தொழில்துறை, தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்கவும் ஆணையிட்டுள்ளார்.

ரூ.10 லட்சம் காசோலை

ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் “தகைசால் தமிழர்’’ விருது பெறும் விருதாளருக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், சுதந்திரதின விழாவின்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story