ஓடும் ரெயிலில் துளையிட்டு பட்டுப்புடவைகள் திருட்டு: 2 ஆண்டுகளுக்கு பிறகு வடமாநில கொள்ளையன் சிக்கினான்


ஓடும் ரெயிலில் துளையிட்டு பட்டுப்புடவைகள் திருட்டு: 2 ஆண்டுகளுக்கு பிறகு வடமாநில கொள்ளையன் சிக்கினான்
x
தினத்தந்தி 2 Aug 2021 1:39 AM GMT (Updated: 2 Aug 2021 1:39 AM GMT)

ஓடும் ரெயிலில் துளையிட்டு பட்டுப்புடவைகள் திருடப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வடமாநில கொள்ளையனை செல்போன் சிக்னல் மூலம் போலீசார் பொறிவைத்து பிடித்தனர்.

சென்னை, 

ஆமதாபாத்தில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந் தேதி பயணிகளை ஏற்றிக்கொண்டு நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தை நோக்கி புறப்பட்டது. இந்த ரெயிலில் இணைக்கப்பட்டிருந்த பார்சல் பெட்டியில், 60 பார்சல்களில் பல லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த பட்டுப்புடைவைகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த ரெயில் மறுநாள் 15-ந் தேதி சென்டிரல் ரெயில் நிலையம் வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்றபிறகு, பார்சல்களை இறக்குவதற்காக ரெயில்வே ஊழியர்கள் பார்சல் பெட்டியை திறக்க முயன்றனர். ஆனால் அந்த பெட்டியின் கதவை திறக்க முடியவில்லை. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் ரெயில்வே பாதுகாப்புப்படையினர் உதவியோடு பெட்டியின் கதவை உடைத்து திறந்தனர்.

அப்போது, பெட்டியினுள் பட்டுப்புடவை பார்சல்கள் கலைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பெட்டியின் உள்ளே சென்று பார்த்தபோது, மேற்கூரையில் ஒரு ஆள் நுழையக்கூடிய அளவில் துளையிடப்பட்டிருந்தது.

அந்த துளை, அருகில் உள்ள பயணிகள் பெட்டியின் கழிவறையின் உள்ளே மேல்பகுதியில் முடிவடைந்தது. அதன்படி, கொள்ளையர்கள் கழிவறையின் மேல்பகுதியில் உள்ள பிளைவுட்டை கூர்மையான கத்தியால் அறுத்து துளையிட்டு, அதன் வழியே ஊர்ந்து சென்று அருகில் உள்ள பார்சல் பெட்டிக்குள் இறங்கி, அங்கு 12 பார்சல்களில் இருந்த பட்டுப்புடவைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சென்டிரல் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார், தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கினர். மேலும் இதுபோன்ற சம்பவம் வேறு எந்த ரெயில் நிலையங்களிலும் நடந்துள்ளதா என்ற விவரங்களையும் சேகரித்து வந்தனர். அப்போது நாக்பூர்-வார்தா ரெயில் நிலையங்களுக்கு இடையே இதே போன்று ரெயில் பெட்டியில் துளையிட்டு கொள்ளையடித்த சம்பவம் ஒன்று அரங்கேறியிருப்பது பாதுகாப்புப்படை போலீசாருக்கு தெரியவந்தது.

அதையடுத்து, கொள்ளையடிக்கப்பட்ட பார்சல் பெட்டியை ஒட்டியுள்ள பயணிகள் பெட்டியில் பயணித்த பயணிகளின் செல்போன் எண் விவரங்களை போலீசார் சேகரித்தனர். அந்த எண்களுடன், நாக்பூர்-வார்தா ரெயில் நிலையங்களுக்கு இடையே நடந்த கொள்ளைச் சம்பவம் அரங்கேறிய பகுதியில் இருந்த செல்போன் எண் சிக்னல்களை ஒப்பிட்டு பார்த்த போலீசார், அந்த வழக்கில் தொடர்புடைய நபர்நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்திருப்பதை உறுதி செய்தனர்.

பின்னர் அந்த கொள்ளையனைப் பிடிக்க, கடந்த மாதம் 21-ந் தேதி தனிப்படை போலீசார் நாக்பூர் சென்றனர். அங்குள்ள போலீசாரின் உதவியுடன், 22-ந் தேதி நாக்பூர் அருகே மொனின்புரா பகுதியில் பதுங்கியிருந்த கொள்ளையன் முகமது ஜாசிம் என்ற சுக்குவை (வயது 32) சுற்றிவளைத்து கைது செய்தனர். இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முகமது குட்டு, முகமது இம்தியாஸ் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து கைது செய்த கொள்ளையனை கடந்த மாதம் 28-ந் தேதி நாக்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அங்கிருந்து போலீசார் சென்னை அழைத்துவந்தனர். சென்னை கோர்ட்டில் குற்றவாளியை ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர். கொள்ளைச் சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு கொள்ளையனை செல்போன் சிக்னல் மூலம் தனிப்படை போலீசார் பொறிவைத்துப் பிடித்ததை ரெயில்வே பாதுகாப்புப்படை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story