ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் செய்ய அனுமதி அளிக்கப்படுமா? அமைச்சர் சேகர்பாபு பதில்


ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் செய்ய அனுமதி அளிக்கப்படுமா? அமைச்சர் சேகர்பாபு பதில்
x

ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் செய்ய அனுமதி அளிக்கப்படுமா என்பதற்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.

சென்னை,

சென்னை தங்கசாலையில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், பைராகிமடம் திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோவில், குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில்களில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும், கோவில்கள் மேம்பாடு குறித்தும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

குறிப்பாக திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோவிலில் உள்ள திருக்குளத்தை அமைச்சர் பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் இருக்கிறதா? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், சென்னை மண்டல இணை ஆணையர் சி.ஹரிபிரியா மற்றும் கோவில் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி, கோவில்களில் ஆய்வு நடத்தி வருகிறோம். அந்தவகையில் பைராகிமடம் திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோவில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்பது கல்வெட்டுகளில் இருக்கின்ற வரலாற்றை பார்த்தால் தெரிகிறது.

அந்த காலத்திலேயே இந்த கோவிலை கட்டுகின்றபோது ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் சொத்துகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கோவிலுக்குள்ளேயே வினோதமாக ஆங்காங்கே தரையில் கல்வெட்டுகளை பொறித்து வைத்திருக்கிறார்கள்.

இந்த கோவிலுக்கு சொந்தமான இடம், விலாசம், சர்வே எண் என்ற விவரமும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும். கோவில் முன்புறம் மின்கம்பம் அகற்றப்பட்டு, கோவில் முகப்பு புதுப்பொலிவு பெறும்.

திருட்டுபோன சிலைகளை மீட்பதில் இந்து சமய அறநிலையத்துறையுடன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவும் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கோவிலுக்கு சொந்தமான இடங்களை விதிகள் மீறி பட்டா மாறுதல் செய்துள்ளனர். விரைவில் பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு கோவில் பெயரில் சுவாதீனம் பெறப்படும்.

கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொன்டு ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் செய்ய அனுமதி அளிப்பது குறித்து முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி, இந்திய மருத்துவ கவுன்சிலுடன் ஒருங்கிணைந்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story