முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் மீதான வழக்குகளை முடித்து விரைவில் சொந்த நாட்டுக்கு அனுப்புவோம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் மீதான வழக்குகளை முடித்து விரைவில் சொந்த நாட்டுக்கு அனுப்புவோம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Aug 2021 12:00 AM GMT (Updated: 2021-08-28T05:30:24+05:30)

முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள் மீதான வழக்குகளை முடித்து விரைவில் சொந்த நாட்டுக்கு அனுப்புவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவை விதி எண் 110-ன் கீழ் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களின் நலனுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதை எதிர்க்கட்சி தலைவர்கள் வரவேற்றனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசும்போது, ‘முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இலங்கை தமிழர்களின் நலனுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்புகளை உறுப்பினர்கள் பாராட்டி வரவேற்று உள்ளனர். உறுப்பினர் வேல்முருகன் பேசும்போது சிறப்பு முகாம் பற்றி குறிப்பிட்டார். நான் பதவி ஏற்றதும் சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களின் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கி உள்ளேன்.

திருச்சி சிறப்பு முகாமில் 80 இலங்கை தமிழர் உள்ளிட்ட 115 வெளிநாட்டினர் கோர்ட்டு, வெளிநாட்டினர் சட்டம் 1946-ன்படி இருக்கக்கூடிய வழிகாட்டுதலின் அடிப்படையில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் மீது 47 வழக்குகளில் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, கோர்ட்டில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல 47 வழக்குகளில் புலன் விசாரணை நடந்து வருகிறது.

வழக்குகள்

இலங்கை தமிழர்களை பொறுத்தவரை 63 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் 38 வழக்குகளில் புலன் விசாரணை முடிந்து, கோர்ட்டில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்க கூடியவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

உணவுப்படியாக நாள் ஒன்றுக்கு ரூ.175 வழங்கப்படுகிறது. மேலும் முகாம்களில் டி.வி., ரேடியோ உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன. இவர்களது உறவினர்கள் அனைத்து வேலை நாட்களில் சந்திக்கவும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

நடவடிக்கை

இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள, இலங்கை தமிழர் உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விரைந்து முடிக்க போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தமிழக அரசு எடுத்த நடவடிக்கையின் விளைவாக 15.7.21 அன்று அருள்ராஜ், முருகையா உள்ளிட்ட 10 இலங்கை தமிழர்கள், அவர்களது நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

எனவே, இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசுக்கு உரிய தகவலை தெரிவித்து இலங்கை தமிழர்கள் தங்களது நாட்டிற்கு திரும்ப அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story