தமிழகத்தில் 18 இடங்களில் புதிய தொழில் பூங்காக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்


தமிழகத்தில் 18 இடங்களில் புதிய தொழில் பூங்காக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
x
தினத்தந்தி 1 Sept 2021 5:32 AM IST (Updated: 1 Sept 2021 5:32 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 18 இடங்களில் புதிய தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் தொழில்துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்திய திறன் அறிக்கையின்படி அதிக வேலைவாய்ப்புள்ள மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது. வேலை வாய்ப்பை அதிகம் அளிக்கும் நகரங்களில் முதல் 10 நகரங்களில் சென்னை உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள தொழில் பூங்காக்களில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நில வங்கிகள் உள்ளன. தொழில் ரீதியாக பின்தங்கிய மாவட்டங்களில் கவனம் செலுத்தி அந்த மாவட்டங்களில் தொழில் பூங்காக்களை அமைப்பதன் மூலம் நிலக்கையிருப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக சிப்காட் நிறுவனத்தால் புதிய நில வங்கிகள் உருவாக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கான நில வங்கிகள் உருவாக்கப்படும்.

18 இடங்களில்...

தமிழகத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களின் ஊழியர்களுக்கு மேம்பட்ட சூழல் அமைப்பை வழங்குவதற்காக அந்தந்த நாட்டுக்கு ஏற்றவாறு ஒருங்கிணைந்த தொழில் நகரியங்களை நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சிலாநத்தம், அல்லிகுளம், வேலாயுதபுரம், நெல்லை கங்கைகொண்டான், திருவண்ணாமலை மேல்மா, ராணிப்பேட்டை பனப்பாக்கம், கிருஷ்ணகிரி சூளகிரி, குருபரப்பள்ளி, திருவள்ளூர் செங்காத்தாக்குளம், காஞ்சீபுரம் வல்லப்பாக்கம், மதுரமங்கலம், சிவகங்கை இலுப்பைக்குடி, தேனி பூமாலைக்குண்டு, நாகை வண்டுவாஞ்சேரி, விருதுநகர், விழுப்புரம், நாமக்கல், தர்மபுரி (விரிவாக்கம்) ஆகிய 18 இடங்களில் புதிய தொழில் பூங்காக்களை உருவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நன்னீர் ஆலைகள்

பன்னாட்டு அறைகலன் பூங்கா (தூத்துக்குடி), மருத்துவ உபகரண தொழில்பூங்கா (சென்னை ஒரகடம்), தோல் பொருள் தொழில்பூங்கா (ராணிப்பேட்டை), உணவுப்பூங்கா (திண்டிவனம், தேனி), மின்வாகனப்பூங்கா (மாநல்லூர்) ஆகியவை அங்குள்ள சிப்காட் தொழில் பூங்காக்களில் உருவாக்கப்படும்.

தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் நீர்தேவையை பூர்த்தி செய்ய 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் ஆலை ஒன்றை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கெலவரப்பள்ளி அணையில் இருந்து ஓசூர் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் நீர்தேவையை பூர்த்தி செய்ய 20 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட சுத்திகரிப்பு ஆலை அமைக்க சிப்காட் நிறுவனம் உத்தேசித்துள்ளது.

மினி டைடல் பார்க்

சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் 50 ஆயிரம் சதுரஅடி கட்டுமானத்துடன் வர்த்தக வசதி மையத்தை இம்மாதத்தில் அமைத்து தொடக்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விழுப்புரம், தூத்துக்குடி, வேலூர், திருப்பூரில் மினி டைடல் பூங்காக்களை டைடல் நிறுவனம் அமைக்க உள்ளது. மற்ற நகரங்களுக்கும் இந்தத் திட்டம் விரிவாக்கப்படும்.

தற்போது பயன்பாட்டில் உள்ள அரசு சிமெண்ட் வணிகப் பெயருடன் ‘வலிமை’ என்ற புதிய வணிகப் பெயர் கொண்ட சிமெண்டை இந்த ஆண்டு வெளிச்சந்தையில் அறிமுகம் செய்ய டான்செம் நிறுவனம் உத்தேசித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
1 More update

Next Story