கோவை மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் ஞாயிற்றுக்கிழமை தியேட்டர்கள், சுற்றுலா மையங்கள் திறக்க தடை


கோவை மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் ஞாயிற்றுக்கிழமை தியேட்டர்கள், சுற்றுலா மையங்கள் திறக்க தடை
x
தினத்தந்தி 15 Sep 2021 11:05 PM GMT (Updated: 15 Sep 2021 11:05 PM GMT)

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக கோவைக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும், தியேட்டர்கள் சுற்றுலா மையங்கள் திறக்க தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை,

கோவை மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் 17-ந்தேதி முதல் கீழ்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால் மருந்தகம், காய்கறி கடைகள், மளிகை கடைகள் இயங்கலாம்.

ஞாயிற்றுக்கிழமை தடை

டிபார்ட்மென்டல் ஸ்டோர், சூப்பர் மார்க்கெட், மற்ற கடைகள், சந்தைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது. மேலும் மாவட்டத்தில் உள்னைத்து உணவகங்கள், அடுமனைகள், திரையரங்குகள், பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயங்க தடைவிதிக்கப்படுகிறது.

மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி மற்றும் 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படுகிறது. உழவர் சந்தைகள் சுழற்சி முறையில் 50 சதவீத கடைகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாவட்டங்களில் உள்ள அனைத்து வார சந்தைகளுக்கும் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும். பொள்ளாச்சி மாட்டு சந்தை, உள்ளூர் வாடிக்கையாளர்களை கொண்டு இயங்க அனுமதிக்கப்படுகிறது. மேற்படி சந்தைகளில் வெளி மாவட்ட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

தடுப்பூசி

கோவை மாவட்டத்தில் 82 சதவீதத்துக்கு மேல் பொதுமக்களுக்கு முதல் கட்ட கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 20-ந்தேதி முதல் அனைத்து வணிக வளாகங்கள், துணிக்கடைகள் நகைகடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கொரோனாதடுப்பூசி முதல் தவணையாவது போட்டு இருக்க வேண்டும். மேலும் வாடிக்கையாளர்கள் கொரோனா தடுப்பூசி முதல் தவணையாவது செலுத்தி இருப்பதை கண்காணிக்க கடை உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும்

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Next Story