சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப ஓட்டல் சிலிண்டர் ரூ.36 உயர்ந்தது - எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப ஓட்டல் சிலிண்டர் ரூ.36 உயர்ந்தது - எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Oct 2021 10:19 PM GMT (Updated: 1 Oct 2021 10:19 PM GMT)

ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் வணிக ரீதியிலான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.36 உயர்ந்து ரூ.1,867.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீடுகளுக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சென்னை,

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைகளுக்கு ஏற்றவாறு மாதம் தோறும் மாற்றி அமைத்து வருகிறது. அதனடிப்படையில் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலை நேற்று மாற்றம் செய்யப்பட்டது. குறிப்பாக வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.900.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஆனால் வணிக பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களின் விலையை மட்டும் மாற்றி அமைத்து உள்ளனர். இந்த வகை சிலிண்டர்கள் ஓட்டல்கள், டீக்கடைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை சிலிண்டர்கள் ரூ.36.50 உயர்ந்து ரூ.1,831-ல் இருந்து ரூ.1867.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 19 கிலோ சிலிண்டரில் எக்ஸ்டிரா டெஜ் என்ற வகை சிலிண்டர் ரூ.36 உயர்ந்து ரூ.1,853.50 லிருந்து ரூ.1889.50 ஆக விலை உயர்ந்து உள்ளது.

இதுதவிர 5 கிலோ சிலிண்டர் புதிதாக வாங்குவதாக இருந்தால் ரூ.1,452.50-லிருந்து ரூ.10 அதிகரித்து ரூ.1,462.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே இந்த வகை சிலிண்டர் பயன்படுத்துபவர்கள் காலி சிலிண்டர்களை மாற்றுவதாக இருந்தால் ரூ.508.50-லிருந்து ரூ.10 உயர்ந்து ரூ.518.50 ஆக மாற்றப்பட்டு உள்ளது.

வணிக ரீதியிலான சிலிண்டர்கள் விலை உயர்வு குறித்து, ஓட்டல்கள் மற்றும் டீக்கடை நடத்துபவர்கள் கூறியதாவது:- சிலிண்டர்கள் விலை மாதம் தோறும் இமாலய அளவில் உயர்ந்து வருவதால் கடைக்கு தேவையான சிலிண்டர்கள் வாங்கி பயன்படுத்த முடியவில்லை. சிலிண்டர் விலை உள்ளிட்ட விலைவாசி உயர்வின் அடிப்படையில் உணவு பொருட்களின் விலைகளையும் உயர்த்த முடியவில்லை. அவ்வாறு விலையை உயர்த்தினால் வாடிக்கையாளர்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மொத்தத்தில் கடையை நடத்துவது நாளுக்கு நாள் கேள்வி குறியாகி வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story