அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் அடுத்த மாதம் முதல் வழக்கமான பெயர்களில் இயக்கம்


அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் அடுத்த மாதம் முதல் வழக்கமான பெயர்களில் இயக்கம்
x
தினத்தந்தி 1 Oct 2021 10:31 PM GMT (Updated: 1 Oct 2021 10:31 PM GMT)

கொரோனாவால் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களும், அடுத்த மாதம் முதல் வழக்கமான பெயர்களில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே மூத்த அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அதன்பிறகு தொற்று பாதிப்பு குறைந்ததால் அனைத்து பகுதிகளுக்கும் தெற்கு ரெயில்வேயால் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், தற்போது 2-வது அலை பாதிப்பும் படிப்படியாக குறைந்து வருவதால், தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு விட்டன. மேலும் நவம்பர் 1-ந்தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டு வருகிற எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகள் அனைத்தும், நவம்பர் மாதம் முதல் வழக்கமான ரெயில் சேவைகளாக இயக்கப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் முதல் அலையில் 47 ரெயில்வே பாதுக்காப்புப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 2-வது அலையின் போது பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டதால், பெரும் அளவில் உயிர்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் சிறப்பு ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நவம்பர் மாதம் முதல் வழக்கமான பெயர்களில் ரெயில் சேவைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கான பணிகளில் ரெயில்வே அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தற்போது தெற்கு ரெயில்வேயில் ஆளில்லா ரெயில்வே ‘கேட்’ எதுவும் இல்லாத வகையில் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பல்வேறு பராமரிப்பு பணிகளும் முடிவடைந்துள்ளன. அதேபோல், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தேவையில்லாத ரெயில் நிலையங்களிலும், சிக்னல் பிரச்சினையால் தேவையில்லா இடங்களிலும் நின்று செல்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் எக்ஸ்பிரஸ் ரெயில் பயணம் நேரம் மிச்சப்படுத்தப்படும். இதன் காரணமாக அடுத்த மாதம் முதல் பல்வேறு வழித்தடங்களில் கூடுதல் ரெயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ரெயில் பயண நேரங்களில், மாற்றமும் செய்யப்பட்டு வருகிறது. தெற்கு ரெயில்வேயை பொருத்தவரை 98 சதவீதம் முதல் டோஸ் தடுப்பூசி போடும் பணி நிறைவடைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story