அண்ணா மேலாண்மை நிலையத்தில் படித்து சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா


அண்ணா மேலாண்மை நிலையத்தில் படித்து சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
x
தினத்தந்தி 1 Oct 2021 11:55 PM GMT (Updated: 1 Oct 2021 11:55 PM GMT)

அண்ணா மேலாண்மை நிலையத்தில் படித்து, சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது. நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அவர்களை வாழ்த்தினார்.

சென்னை,

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில், 2020-21 சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு ஆகியவற்றை வழங்கி வாழ்த்தினார்.

இதையடுத்து, மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

அரசு பணி என்பது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு விருப்பமாக இருக்கக்கூடிய பணி. அதிலும் குறிப்பாக இந்திய ஆட்சி பணி என்பது எண்ணற்ற இளைஞர்களின் கனவாக இருக்கக்கூடிய நிலை.

வசதி படைத்தவர்கள் மட்டுமே எழுத முடியும் என்றிருந்த இந்த தேர்வை கடைக்கோடியில் இருப்பவர்களும் எழுதவேண்டும் என்பதற்கு அடித்தளம் அமைக்கக்கூடிய வகையில் தமிழ்நாட்டில் 1966-ம் ஆண்டு பட்டியலினத்தை சார்ந்த இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க தேர்வு மையம் தொடங்கப்பட்டது. ஆனால் அது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் போய்ச்சேர வேண்டும் என்பதற்காக 1971-ம் ஆண்டு இன்னொரு சிறப்பு மையம் அவர்களுக்காக அமைக்கப்பட்டது. இந்த இரண்டு மையங்களையும் கருணாநிதி 2000-ம் ஆண்டு ஒருங்கிணைத்து அகில இந்திய குடிமை பணிகள் தேர்வு பயிற்சி மையம் என்று பெயரிட்டு, அண்ணா மேலாண்மை நிலையத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தார்.

தமிழக அரசு இந்த மையத்தை மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக நடத்தி வருகிறது. இந்த மையத்தை பற்றிக் கேள்விப்பட்டு மேற்கு வங்காளம், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருக்கக்கூடியவர்கள் இதுகுறித்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய ஒரு செய்தி.

2020-ம் ஆண்டு குடிமைப்பணி தேர்வில் (சிவில் சர்வீசஸ்) வெற்றி பெற்றவர்களில் 7 பெண்கள், 9 ஆண்கள் இந்த மையத்தில் பயிற்சி பெற்றவர்கள். இவர்களுள் ஒருவர் மாற்றுத்திறனாளி. மாற்றுத்திறனாளி ஒருவரும் தன் மகத்தான உழைப்பால் இந்த மாபெரும் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற தேனினும் இனிய செய்தி என் செவிகளில் விழுந்தபோது, அதில் எனக்கு என்ன பெருமை என்றால், மாற்றுத்திறனாளிகள் துறையை கைவசம் வைத்திருக்கக்கூடியவன்தான் நான். அதனால்தான் அந்த பெருமை எனக்கு.

எல்லோரும் அரசின் உயர் பதவிகளில் அமர்ந்து பணியாற்றும்போது, தமிழ்நாட்டுக்கு சேரவேண்டிய நன்மைகள் தடம்புரளாமல் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு பாடுபடுவீர்கள் என நம்புகிறேன். இந்திய அளவில் உயர் பணிகளில் இருக்கிறபோது நீங்கள் பிறந்த மண்ணை, வளர்ந்த மண்ணை, தவழ்ந்தபோது பேசிய தாய்மொழியை மறக்காமல் செயல்படுவீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

இந்திய ஆட்சி பணியில் வந்தவுடன் நாம் எந்த சிற்றூரிலிருந்து வந்தோம் என்பதை மறந்துவிடக்கூடாது. நாம் அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்று ஒருபோதும் சிந்திக்கக்கூடாது. நீங்கள் நேர்மையாகவும், தூய்மையாகவும் பணியாற்ற வேண்டிய கடமை உணர்வோடு ஒவ்வொரு நொடியும் திகழவேண்டும். பணியில் இருக்கும்போது பலர் உங்களை தவறான வழிக்குத் தூண்டுபவர்களாக இருப்பார்கள். எந்தவிதமான சபலத்துக்கும் ஆட்பட்டுவிடாமல் நேர்கொண்ட பார்வையுடன் நிமிர்ந்து நடைபோடவேண்டியது உங்களுடைய கடமை.

மக்களை நேசிப்பது மிகவும் முக்கியம். அவர்களுக்காகத்தான் நாம் பணியாற்றுகிறோம் என்ற எண்ணம் உங்களுக்கு எப்போதும் இருக்கவேண்டும். பிரச்சினைகளை கண்டு ஓடி ஒளியாமல் அவை கிளம்பும் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்துத் தீர்த்து வைப்பதுதான் நல்ல நிர்வாகத்திற்கு அழகு. பேரறிஞர் அண்ணா ஒரு வாசகத்தை அடிக்கடி குறிப்பிட்டுச் சொல்வார். மக்களிடம் செல். அவர்களோடு வாழ். அவர்களை நேசி. அவர்களிடமிருந்து கற்றுக்கொள். அவர்களுக்குத் தெரிந்ததிலிருந்து தொடங்கு. அவர்களிடம் இருப்பதிலிருந்து கட்டுமானம் செய்.

பணி முடிந்த பிறகு அவர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தி விட்டுத் திரும்பி வா. இந்த வாசகத்தைக் குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்றிருக்கக்கூடிய அத்தனை பேரும் இதயத்தில் எழுதி ஒட்டிக்கொள்ளவேண்டும். உயர்ந்த அலுவலராக, மக்கள் மனத்தில் நிற்கும் ஒப்பற்ற மனிதராக, செல்லுகிற இடங்களில் எல்லாம் நீங்கள் அந்த இடத்தை அடைவதற்கு முன் உங்கள் நற்பெயர் சென்று சேரக்கூடிய வகையில் நடந்து கொள்ள வேண்டும் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர் மைதிலி கே.ராஜேந்திரன், பொதுத்துறை செயலாளர் டி.ஜகந்நாதன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story