போக்சோ, ஊழல் வழக்குகளில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதை நிறுத்த வேண்டும்


போக்சோ, ஊழல் வழக்குகளில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதை நிறுத்த வேண்டும்
x
தினத்தந்தி 2 Oct 2021 5:29 PM GMT (Updated: 2 Oct 2021 5:29 PM GMT)

போக்சோ மற்றும் ஊழல் வழக்குகளில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பிழைப்பூதியம் வழங்குவதை நிறுத்தும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை, 

ஊழல் தடுப்பு நடவடிக்கையில் சிக்கிய ஊழியர்கள் குறித்து பேரூராட்சிகள் ஆணையரிடமும், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஆசிரியர்கள், ஊழியர்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனரிடமும் ஆர்.பெரியசாமி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டார். அதற்கு சரியான பதில்கள் அளிக்கப்படாததால்,

மாநில தகவல் ஆணையத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் விசாரித்தார். பின்னர் அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பேரூராட்சிகள் ஆணையத்தின் பொது தகவல் அதிகாரி அளித்த தகவலில், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் பேரூராட்சிகளில் 42 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதர குற்றங்களுக்காக 60 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் குற்றங்களுக்காக 232 ஆசிரியர்கள், ஊழியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பள்ளிக்கல்வி துறை பொது தகவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

லஞ்ச வழக்குகளிலும், போக்சோ வழக்குகளிலும் சிக்கும் அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படும்போது, முதல் 90 நாட்களுக்கு 50 சதவீதம் ஊதியம் பிழைப்பூதியம் என்ற பெயரில் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த தொகை 90-ல் இருந்து 180 நாட்கள் வரை 75 சதவீதமும், 180 நாட்களுக்கு பிறகு முழு ஊதியமும் வழங்கப்படுகிறது.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவர் 6 ஆண்டுகள் பிழைப்பூதியம் என்ற பெயரில் முழு ஊதியத்தை வாங்கியுள்ளார். அதன் பிறகு அவருக்கு போக்சோ கோர்ட்டு 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

போக்சோ மற்றும் லஞ்ச வழக்குகளில் கோர்ட்டு விசாரணையிலும், துறை ரீதியான விசாரணையிலும் காலதாமதம் ஏற்படுகிறது. அதனால், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பிழைப்பூதியம் என்ற பெயரில் முழு ஊதியம் வழங்குவதால், அரசுக்கு பெரும் நிதி சுமையை ஏற்படுத்துகிறது.

அரசு ஊழியர் என்ற அந்தஸ்தை துஷ்பிரயோகம் செய்து பணிக்காலத்தில் ஊழலில் திழைத்துவிட்டு, பணியிடை காலத்திலும் பணி செய்யாமல் ஊதியம் வாங்குவது, சமுதாயத்தில் அரசு ஊழியர்கள் மீதான மதிப்பை கெடுக்கிறது. எனவே, ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் போக்சோ வழக்குகளில் சிக்கும் அரசு ஊழியர்களுக்கு பிழைப்பூதியம் வழங்கும் நடைமுறையை நிறுத்தும் வகையில், தமிழ்நாடு ஊதியம் மற்றும் பிழைப்பூதிய சட்டம் மற்றும் பணி தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story