தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் தடுப்பூசி போடாத 1,400 பேர் கொரோனாவுக்கு பலி - பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்


தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் தடுப்பூசி போடாத 1,400 பேர் கொரோனாவுக்கு பலி - பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 2 Oct 2021 11:31 PM GMT (Updated: 2 Oct 2021 11:31 PM GMT)

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் தடுப்பூசி போடாத 1,419 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு தொடர்ந்து மெகா தடுப்பூசி முகாம்களை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா தடுப்பூசி, மரணத்தை வெகுவாக தடுக்கிறது.

எனவே அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கடந்த 2 மாதத்தில் மட்டும் தமிழகத்தில் ஆயிரத்து 626 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதில் ஆயிரத்து 419 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள். அதாவது 87 சதவீதம் பேர் ஆகும். இவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால் இறப்பை தவிர்த்திருந்திருக்கலாம். அதேபோல், ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் மிகக் குறைவானவர்களே உயிரிழந்திருக்கின்றனர். அதில் 9 சதவீதம் பேர் அடங்குவர்.

2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் உயிரிழந்தவர்கள் 4 சதவீதம் மட்டுமே. அதன்படி தடுப்பூசி போதுமான அளவுக்கு பாதுகாப்பை தருகிறது. மேலும், 88 ஆயிரத்து 719 பேர் கடந்த 2 மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 50 சதவீதம் பேர் வீட்டுத்தனிமையில் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 45 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்ததால் நலம் பெற்றுள்ளனர்.

மேலும், 5 ஆயிரத்து 816 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4 ஆயிரத்து 405 பேர், அதாவது 76 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள். மேலும், கடந்த 2 மாதங்களில் மட்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் 73 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் ஆவர். எனவே பொதுமக்கள் தங்களது நலன் கருதி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story