சென்னை போலீசாருக்கான குறைதீர்ப்பு முகாம்: 2 நாட்களில் 1,554 போலீசார் கோரிக்கை மனு


சென்னை போலீசாருக்கான குறைதீர்ப்பு முகாம்: 2 நாட்களில் 1,554 போலீசார் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 3 Oct 2021 7:12 PM GMT (Updated: 3 Oct 2021 7:12 PM GMT)

சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற போலீசாருக்கான குறைதீர்ப்பு முகாமில் 1,554 மனுக்களை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பெற்றுள்ளார்.

சென்னை,

‘உங்கள் துறையில் முதல்-அமைச்சர்’ திட்டத்தின் கீழ் போலீசாருக்கு குறைதீர்ப்பு முகாம் நடத்தி, அதன்மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும் என்று அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர கமிஷனர்களுக்கு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் போலீசார் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அவர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

2-வது நாளாக...

அந்த வகையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போலீசாருக்கான குறைதீர்ப்பு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் 1,359 போலீசார் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அளித்தனர். போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அவர்களுடைய குறைகளை கேட்டறிந்து மதியம் 3 மணி முதல் இரவு 10.30 மணி வரை 7½ மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து மனுக்களை பெற்றார்.

இந்த நிலையில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போலீசாருக்கான குறைதீர்ப்பு முகாம் 2-வது நாளாக நேற்று நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் காலை 11.30 மணி முதல் மதியம் 3 மணி வரை 3½ மணி நேரம் போலீசாரிடம் மனுக்களை பெற்றார். நேற்று 195 போலீசார் மனுக்களை அளித்தனர்.

1,554 மனுக்கள்

2 நாட்களில் மொத்தம் 1,554 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்களில், பணி இடமாறுதல், தண்டனைக்குறைப்பு, ஊதிய முரண்பாடு களைதல், போலீஸ் குடியிருப்பு வேண்டுதல், போலீசார் சேமநல நிதியில் இருந்து மருத்துவ உதவித்தொகை கோருதல் போன்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

Next Story