தமிழகத்தில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


தமிழகத்தில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 4 Oct 2021 8:53 AM GMT (Updated: 4 Oct 2021 8:53 AM GMT)

தமிழகத்தில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம் செட்டி தோட்டம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழகத்தில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரை டெங்கு காய்ச்சலால் 2,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 83,409 டெங்கு காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இந்தப் பரிசோதனைகளில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது".

"முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, தமிழகத்தில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர் துரித நடவடிக்கையின் காரணமாக, கொரோனா தொற்று நோய்ப் பரவல் வெகுவாகக் குறைந்து வருகிறது. தற்பொழுது பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மழைக்கால நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால், கொசு ஒழிப்புப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

அண்டை மாநிலங்களில் ஏற்பட்ட பல்வேறு காய்ச்சல்கள் நம்முடைய மாநிலத்துக்குப் பரவுவதைத் தடுக்கும் வகையில், மாநில எல்லைப் பகுதிகளில் பல்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநில சுகாதாரத்துறையின் மூலம் இந்தப் பணிகள் அனைத்தும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story