நீலகிரி, கோவை உள்பட 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்


நீலகிரி, கோவை உள்பட 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 8 Oct 2021 9:03 PM GMT (Updated: 8 Oct 2021 9:03 PM GMT)

நீலகிரி, கோவை உள்பட 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்.

சென்னை,

தென்மேற்கு பருவகாற்று காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகவும், தென்மேற்கு பருவகாற்று காரணமாகவும் தமிழகத்தில் வடமாவட்டங்கள், தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை இன்று (சனிக்கிழமை) பெய்யக்கூடும். நாளை நீலகிரி, கோவை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், வட மாவட்டங்கள், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

நாளை மறுதினம் (திங்கட்கிழமை) வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சீபுரம், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டையில் ஓரிரு இடங்களில் கனமழையும், வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழையும் பெய்யக்கூடும். 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் உள்பட ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக பள்ளிப்பட்டில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதுதவிர பென்னாகரம் 8 செ.மீ, சோளிங்கர் 5 செ.மீ., கிருஷ்ணகிரி, நடுவட்டம் தலா 4 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்திருக்கிறது.

Next Story