தமிழகத்தில் 39 ஆயிரம் காசநோயாளிகள் ஆய்வு அறிக்கையில் தகவல்


தமிழகத்தில் 39 ஆயிரம் காசநோயாளிகள் ஆய்வு அறிக்கையில் தகவல்
x
தினத்தந்தி 11 Oct 2021 8:55 PM GMT (Updated: 11 Oct 2021 8:55 PM GMT)

தமிழகத்தில் 39 ஆயிரத்து 222 காசநோயாளிகள் உள்ளதாக நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் ஆய்வு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

சென்னை,

தென்சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் காசநோய் திட்ட ஒழிப்பு செயல்பாடுகள் தொடர்பான ஆய்வு கடந்த 7-ந்தேதி முதல் நேற்று (திங்கட்கிழமை) வரை நடைபெற்றது. உலக சுகாதார அமைப்பின் தேசிய திட்ட ஒருங்கிணைப் பாளர் ரஞ்சனி ராமச்சந்திரன் தலைமையிலான குழு இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் முடிவுகளை அறிக்கையாக தயார் செய்து நேற்று சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் ஒப்படைத்தனர். இந்த ஆய்வு அறிக்கையின் விவரம் வருமாறு:-

இந்தியாவில் காசநோயை குறைக்க தேசிய காசநோய் தடுப்பு திட்டமானது கடந்த 2020-ம் ஆண்டு முதல் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. வரும் 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிப்பதற்கு, தமிழக அரசு சார்பில் ‘காசநோய் இல்லாத தமிழ்நாடு - 2025’ என சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் தமிழகத்தில் திருவள்ளூர் சிறந்து விளங்குகிறது. தமிழகம் புதிய காசநோயாளிகளை குணப்படுத்துவதில் 86 சதவீதம் வெற்றி அடைந்துள்ளது.

39 ஆயிரத்து 222 பேர்

தமிழ்நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காலத்தில் 39 ஆயிரத்து 222 காச நோயாளிகளுக்கு தேவைப்படும் காசநோய் மருந்துகள் காசநோய் களப்பணியாளர்கள் மூலம் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிகிச்சை நெறிமுறைகளின்படி அவர்களது வீட்டிலேயே சளி மாதிரி, ஊடுகதிர் படம் எடுக்கப்பட்டு, தொலைபேசி வாயிலாக சிகிச்சை குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும் இணையதளம் மூலமாக அனைத்து மருந்தகங்களில் காசநோய் மருந்து வினியோகம் குறித்த தகவல் அளிப்பதன் மூலம் தனியார் அமைப்புகளிலும் காசநோய் சிகிச்சைகளை தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் காசநோய் கண்டறியும் முகாம்கள் மூலம் 42 ஆயிரத்து 797 பரிசோதனைகள் செய்யப்பட்டு, 465 பேருக்கு காசநோய் இருப்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை பெற்றுக்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆய்வு குழுவினரிடம் தெரிவித்தார்.

Next Story