21 நாட்கள் டிமிக்கி கொடுத்த ஆட்கொல்லி புலி பிடிபட்டது


21 நாட்கள் டிமிக்கி கொடுத்த ஆட்கொல்லி புலி பிடிபட்டது
x
தினத்தந்தி 15 Oct 2021 9:32 AM GMT (Updated: 15 Oct 2021 10:07 AM GMT)

நீலகிரி மாவட்டத்தில் மக்கள் மற்றும் கால்நடைகளை தாக்கி வந்த டி 23 என்ற பெயரிடப்பட்ட புலி பிடிப்பட்டது.

ஊட்டி

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினக்குடி, சிங்காரா வனப்பகுதியில் அடுத்தடுத்து 4 பேர் புலி தாக்கி இறந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட மாடுகளையும் புலி கொன்றது.

பொதுமக்கள் போராட்டம் காரணமாக அந்த புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக புலியை மயக்க ஊசி செலுத்தி உயிரோடு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டி-23 புலி என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த புலியை பிடிக்கும் பணியில் மோப்பநாய்களும், கும்கி யானைகளும் ஈடுபடுத்தப்பட்டது.

இதற்காக வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது/ மரங்களில் பரண் அமைத்து அதில் இருந்தவாறு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், மசினகுடி வனப்பகுதியில் புலியின் நடமாட்டத்தை கண்ட வனத்துறையினர் புலிக்கு மயக்க ஊசி செலுத்தினர்.

எனினும் புலி தப்பியோடியது. மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் புலி சோர்வாக காணப்படும் என்பதால் புலியை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் மசினகுடி பகுதியில் மீண்டும் மயக்க ஊசி செலுத்தி டி 23 புலியை வனத்துறையினர் பிடித்தனர். மசினகுடியில் புலிக்கு மீண்டும் மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில் புலியை வனத்துறையினர் பிடித்துள்ளனர்.  21 நாட்களாக புலியை பிடிக்க நடைபெற்ற தேடுதல் வேட்டையில் இறுதியாக டி 23 புலி பிடிப்பட்டுள்ளது. 

Next Story
  • chat