தமிழகத்தை இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலமாக மாற்றி காட்டுவோம் மு.க.ஸ்டாலின் பேச்சு


தமிழகத்தை இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலமாக மாற்றி காட்டுவோம் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 15 Oct 2021 11:51 PM GMT (Updated: 15 Oct 2021 11:51 PM GMT)

தமிழகத்தை இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலமாக மாற்றி காட்டுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

சென்னையில், லயோலா மேலாண்மை கல்வி நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.பின்னர் அவர் பேசியதாவது:-

கருணாநிதிக்கும், லயோலா கல்லூரிக்கும் ஒரு பெரிய தொடர்பே உண்டு. ஏனென்றால், கருணாநிதி குடும்பத்தில் இருந்து என்னுடைய அண்ணன் அழகிரி மற்றும் கலாநிதி மாறன், தயாநிதிமாறன் எம்.பி. ஆகியோர் இந்த கல்லூரியில்தான் படித்தார்கள். ஏன், என்னுடைய மகன் உதயநிதி ஸ்டாலின் கூட இந்த கல்லூரியில்தான் படித்திருக்கிறார். இந்த கல்லூரியில் நான் படிக்காமல் போய்விட்டேனே என்ற ஏக்கம் இப்போது எனக்கு வந்திருக்கிறது. ஏக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு கல்லூரி இருக்கும் என்று சொன்னால், அது லயோலா கல்லூரியாகத்தான் இருக்கமுடியும்.

கருணாநிதி திறந்து வைத்தது ஒரு தொழில்நுட்ப கல்லூரி. நான் திறந்து வைத்திருப்பது ஒரு மேலாண்மைக்கல்லூரி. தி.மு.க. வளர்ந்ததே கல்லூரிகளில்தான். அதனால்தான், தி.மு.க. ஆட்சிக்கு வந்தப்பிறகு, அதிகமான கல்லூரிகளை உருவாக்கியிருக்கிறோம்,

அரவணைத்து செல்வோம்

அனைவருக்கும் அடிப்படை கல்வி என்ற இலக்கை நாம் எளிதாக அடைந்துவிட்டோம். அனைவருக்கும் ஏதாவது ஒரு பட்டம் என்ற இலக்கையும் விரைவில் அடைந்துவிடுவோம். அனைவரும் உயர்கல்வி கற்றவர்களாக வளரவேண்டும்; வாழவேண்டும். அந்த இலக்கை எட்டிய முதல் மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு வளரவேண்டும். நம் ஆட்சி அமைந்து, 100 நாட்களில் பல நூறு திட்டங்களை அறிவித்து, அவற்றை செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். இருண்ட நிலையில் வீழ்ந்து கிடந்த தமிழ்நாட்டையும், தமிழ்மக்களையும் ஒளிமயமான பாதையில் வீறுநடை போட வைத்திருக்கிறோம். சமூகநீதி கொண்ட பொருளாதார வளர்ச்சியை உருவாக்க நினைக்கிறோம். அனைத்து சமூகத்தினரையும் அரவணைத்து செல்கிற அரசாக நம்முடைய அரசு நிச்சயம் அமையும்.

மிகச்சிறந்த மாநிலம்

இதன் காரணமாக தமிழ்நாட்டை இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலமாக மாற்றி காட்டுவோம். அந்த மாற்றத்திற்கு, முன்னேற்றத்திற்கு ஒவ்வொருவரும் உதவிட வேண்டும். 10 மாநிலங்களை குறிப்பிட்டு, அதில் முதலிடத்தில் முதல்-அமைச்சராக நான் இருக்கிறேன் என்று பெருமையாக சொன்னார்கள், இது எனக்கு பெருமை இல்லை. நம்முடைய மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது என்ற பெருமைதான் எனக்கு உள்ளபடியே பெருமிதம் தரும். அதற்கு நீங்கள் எப்போதும் எங்களுக்கு துணை நிற்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கனிமொழி, பி.வில்சன், எம்.எல்.ஏ.க்கள் நா.எழிலன், இனிகோ இருதயராஜ், லயோலா மேலாண்மை கல்வி நிறுவன இயக்குனர் ஜோ அருண், மதுரை ஏசு சபை மாநிலத் தலைவர் ஜே.டேனிஸ் பொன்னையா, சென்னை ஏசு சபை மாநிலத் தலைவர் செபமாலை இருதயராஜா, லயோலா கல்லூரி கல்வி நிறுவனங்களின் அதிபர் பிரான்சிஸ் பி.சேவியர், ஆதித்ய பிர்லா குழுமத்தின் நிர்வாகத் தலைவர் சிவ சிவகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Next Story