வன பாதுகாப்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்; மத்திய அரசுக்கு, சீமான் வலியுறுத்தல்

வன பாதுகாப்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசுக்கு, சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காடுகளின் பரப்பளவை அதிகரிக்கிறோம் என்ற பெயரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வன பாதுகாப்பு சட்ட திருத்த வரைவானது, அதற்கு நேர் எதிரான விதிகளை கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நாட்டின் இயற்கை வளங்களான காடுகளை அழித்தொழிக்கும் வகையில் வனப்பாதுகாப்பு சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை கொண்டுவர முயற்சிக்கப்படுகிறது.
ஏற்கனவே நாட்டின், நில வளம், நீர் வளம், கடல் வளம், கனிம வளம் ஆகியவற்றை பல்வேறு சட்டத்திருத்தங்கள் மூலம் பன்னாட்டு பெருமுதலாளிகளின் லாப வேட்டைக்காக தாரைவார்த்துள்ள பா.ஜ.க. அரசு, தற்போது மீதமுள்ள இயற்கை வளங்களான காடுகளையும் தாரைவார்ப்பதற்காக கொண்டுவந்துள்ள இச்சட்டத்தை நாட்டு மக்கள் அனுமதிக்கக் கூடாது. இத்திட்டத்தின் விதிகளை எதிர்த்து வரும் நவம்பர் 1-ந்தேதிக்குள் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களை மத்திய அரசுக்கு கருத்துக்கேட்பு தளத்தின் வழியாக தெரிவிக்க வேண்டும்.
ஆகவே வனப்பாதுகாப்பு சட்டத்திருத்த வரைவை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இதுகுறித்து மத்திய அரசுக்கு, மாநில தி.மு.க. அரசு அழுத்தம் கொடுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story