நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடுநிலையுடன் நடத்த வேண்டும் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் கமிஷனர் உத்தரவு


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடுநிலையுடன் நடத்த வேண்டும் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் கமிஷனர் உத்தரவு
x
தினத்தந்தி 2 Nov 2021 11:16 PM GMT (Updated: 2 Nov 2021 11:16 PM GMT)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடுநிலையுடனும் பாதுகாப்புடனும் நடைபெற வேண்டும் என்று மாநில தேர்தல் கமிஷனர் பழனிகுமார் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆயத்தப்பணிகள் குறித்த மண்டல ஆய்வுக் கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் உள்ள ரிப்பன் கட்டிடத்தில் நேற்று நடந்தது. தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷனர் பழனிகுமார் தலைமை தாங்கினார். மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி முன்னிலை வகித்தார்.

மாவட்ட தேர்தல் அலுவலர்களான மாவட்ட கலெக்டர்கள் தங்களுடைய மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்தும், மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தங்கள் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர்.

நடுநிலையுடன் தேர்தல்

பின்னர், மாநில தேர்தல் கமிஷனர் பழனிகுமார் பேசியதாவது:-

நகர்ப்புற தேர்தல் நடுநிலையுடனும் பாதுகாப்புடனும் நடைபெற வேண்டும்.

இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு வந்துள்ள 6 மாவட்டங்களைச் சார்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இக்கூட்டத்தில் அளிக்கப்படும் பயிற்சிகளை முறையாக அறிந்து கொண்டு தேர்தல் பணியாற்ற வேண்டும். தேர்தல் பணிகள் குறித்து தங்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களை வெளிபடுத்தி இக்கூட்டத்தின் வாயிலாக தெளிவுபடுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கலெக்டர்கள் த.மோகன் (விழுப்புரம்), டாக்டர் மா.ஆர்த்தி (காஞ்சீபுரம்), கி.பாலசுப்பிரமணியம் (கடலூர்), பா.முருகேஷ் (திருவண்ணாமலை), சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (வருவாய் மற்றும் நிதி) விஷூ மகாஜன் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் சக்திகணேசன் (கடலூர்), அ.பவன்குமார் ரெட்டி (திருவண்ணாமலை) மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோவிந்தராஜ் (விழுப்புரம்), முத்து கண்ணன் (ராணிப்பேட்டை). காஞ்சீபுரம் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு குலசேகரன் மற்றும் விழுப்புரம், காஞ்சீபுரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story