முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தேனியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்


முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தேனியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Nov 2021 11:51 PM GMT (Updated: 9 Nov 2021 11:51 PM GMT)

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்காமல் கேரளத்தின் நிர்ப்பந்தம் காரணமாக நீர் இருப்பை தி.மு.க. அரசு குறைத்திருப்பதாக கூறி தேனியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி,

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்க வேண்டும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காத கேரள அரசை கண்டித்தும், அதற்கு துணை போவதாக தி.மு.க. அரசை கண்டித்தும் அ.தி.மு.க. சார்பில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேனி மாவட்டம், கம்பம் வ.உ.சி. திடலில் அ.தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு குந்தகம்

முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்கவும், திறக்கவும் முழு அதிகாரம் தமிழகத்துக்கு தான் இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் தான் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டது. அதற்கு மேல் வந்த தண்ணீர் உபரிநீராக கேரளாவுக்கு திறக்கப்பட்டது. இது தான் வரலாறு. அந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு இன்றைக்கு ஆளும் தி.மு.க. அரசால் குந்தகம் ஏற்பட்டுள்ளது.

அதற்கு அமைச்சர் துரைமுருகன் இப்போது ஒரு காரணம் சொல்லி இருக்கிறார். அது சப்பைக்கட்டு. ஜெயலலிதா மட்டும் எப்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கினார்?. இதற்கு ஆளும் தி.மு.க. அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். ஆனால் இப்போது தண்ணீர் திறக்கப்பட்டது குறித்து பொய் கணக்குகளை சொல்லி வருகிறார்கள். இது ஏற்புடையது அல்ல.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல்

இதுபோல திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிலக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Next Story