அரசின் நிதிநிலையை சீராக்க தேவையான பரிந்துரையை ஆடிட்டர்கள் வழங்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


அரசின் நிதிநிலையை சீராக்க தேவையான பரிந்துரையை ஆடிட்டர்கள் வழங்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 19 Nov 2021 11:54 PM GMT (Updated: 19 Nov 2021 11:54 PM GMT)

தமிழக அரசின் நிதி நிலையை சீராக்குவதற்கு தேவையான பரிந்துரையை ஆடிட்டர்கள் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

இந்திய பட்டயக் கணக்கறிஞர்கள் (ஆடிட்டர்கள்) கழகத்தின் 53-வது மண்டல கருத்தரங்கு கோவையில் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தை சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:-

தென்மண்டல கவுன்சில் வரலாற்றில் முதன் முறையாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டயக் கணக்கறிஞர்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்காக இது அமைந்துள்ளது. 1998-ம் ஆண்டு சென்னையில் நடந்த இந்த கழகத்தின் பொன்விழாவை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். பட்டயக் கணக்கறிஞர்களான உங்கள் மீது எப்போதுமே எனக்கு பெருமதிப்பு உண்டு.

தடுப்பூசி முகாம்கள் நடத்தியது, நாட்டில் எங்கு பேரிடர் ஏற்பட்டாலும் பிரதமர் மற்றும் தொடர்புடைய மாநில முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதியளிப்பது என சமூக பொறுப்புணர்வுடன் செயல்படுபவர்களாக பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் இருந்து வருகிறது.

அறிவுத் திறனுள்ளவர்கள்

பட்டயக் கணக்கறிஞர்களான உங்களின் அறிவுத்திறன் நாட்டை ஆள்பவர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும், சமூகத்தின் இதர பிரிவினருக்கும் பல வழிகளிலும் துணையாக உள்ளது. நிதித்துறை, கார்ப்பரேட் நிர்வாகம், கணக்கு தணிக்கை போன்ற செயல்பாடுகளில் அரசுக்கு உதவுவதோடு உங்கள் பணி நின்று விடுவதில்லை.

அவை சார்ந்த சட்டங்களை இயற்றுவதிலும், வேளாண் வளர்ச்சி செயல்பாடுகளிலும், நாட்டின் வளர்ச்சிக்கு நீங்கள் பெரும் பங்காற்றி வருகிறீர்கள். ஆகையால் உங்களை ‘நாட்டு வளர்ச்சிக்கான பங்களிப்பாளர்கள்’ என்று அழைப்பதுதான் சரியாக இருக்கும். உலக அளவில் நம் நாடு முன்னணியில் இருக்கவேண்டும் என்றால் அதற்கு வலுவான நிதிக் கட்டமைப்புகளும், ஒழுங்குமுறைகளும் தேவை. அதற்கான யோசனைகளை வழங்குவதில் உங்கள் திறமை மீது நாட்டில் உள்ள அனைவருக்கும் பெரும் நம்பிக்கை உள்ளது.

பரிந்துரைகள்

அரசின் உயர்பதவிகளில் உங்கள் துறையைச் சேர்ந்த பலர் உள்ளனர். அரசு அமைக்கும் முக்கிய குழுக்களிலும் இடம் பெற்று தகுந்த ஆலோசனைகளை வழங்குகின்றனர். இந்த தருணத்தில் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தியை சொல்ல விரும்புகிறேன். பொருளாதார குற்றப்பிரிவிலும், ஊழல் தடுப்புப்பிரிவிலும், நிறுவனங்களின் மோசடிகளை விசாரிக்க தமிழ்நாடு அரசு புதிய தணிக்கை பிரிவுகளை இப்போது தொடங்கியுள்ளது.

நிதிநிலையைச் சீராக்குவதிலும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய நடவடிக்கைகளிலும் தமிழ்நாடு அரசுக்கு தேவையான பரிந்துரைகளை நீங்கள் தெரிவித்தால் உடனடியாக அவற்றில் கவனம் செலுத்தி, நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். தமிழ்நாடு அரசு உங்களுக்கு வேண்டிய உதவிகளை அளிக்க தயராக இருக்கிறது என்ற உறுதியை வழங்குகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொழில்நுட்ப மாநாடு

இதற்கிடையே, தமிழ்நாடு அரசும், இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து ‘கனெக்ட் 2021’ என்ற மாநாட்டை நடத்த உள்ளது. இதையொட்டி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘வீடியோ’ உரையாடல் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசும் - இந்தியத் தொழில் கூட்டமைப்பும் இணைந்து கடந்த 2000-ம் ஆண்டு முதல் ‘கனெக்ட்’ என்ற மாநாட்டை நடத்தி வருகிறது. இம்மாநாட்டுடன் இணைந்து பொருட்காட்சியையும் ஒருங்கிணைத்து வருகிறது. இதன் மூலமாக தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக மாறி வருகிறது. தொழில்நுட்ப மண்டலங்களை அமைத்தது. இதன் மிக முக்கியமான சாதனை ஆகும். ஐ.சி.டி. அகடமி எனப்படும் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனம், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், விண்வெளி தொழில் பூங்கா ஆகியவையும் உருவாக்கப்பட்டு திறம்பட செயல்பட்டு வருகின்றன. இதற்குக் காரணமான அனைவரையும் பாராட்டுகிறேன்.

இதன்தொடர்ச்சியாக இந்த ‘கனெக்ட்’ கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளீர்கள். இதன் மூலமாக தகவல் தொழில்நுட்பவியல் துறையில் புதிய முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி

இந்திய அளவில் தகவல் தொழில் நுட்பவியல்துறையில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அனைத்து மாவட்டங்களிலும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தவேண்டும்.

2030-ம் ஆண்டுக்குள் நமது தமிழ்நாடு ரூ.1 லட்சம் கோடி அளவில் பொருளாதார உற்பத்தியை அடையவேண்டும் என்று நான் சொல்லி இருப்பதை நீங்கள் அறிவீர்கள். அதற்கு இந்த மாநாடும் உதவி செய்வதாக அமைய வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒரு நிரந்தரமான முழுமையான தொழில்நுட்பச்சூழலை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை அனைவரும் வழங்க வேண்டும். அதனைச் செயல்படுத்தித் தருவதற்கு தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. உலகம் முழுவதும் இருந்து வந்து கலந்து கொண்டுள்ள ஆளுமைகள் அனைவரையும் வரவேற்கிறேன்.

‘கனெக்ட்-2021’ தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கு வெற்றி பெற நெஞ்சார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Next Story