புதுச்சேரியை போல தமிழகத்திலும் வெள்ளம் பாதித்த குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்


புதுச்சேரியை போல தமிழகத்திலும் வெள்ளம் பாதித்த குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 23 Nov 2021 11:07 PM GMT (Updated: 23 Nov 2021 11:07 PM GMT)

புதுச்சேரியை போல தமிழகத்திலும் வெள்ளம் பாதித்த குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஆண்டுகளை போலவே இப்போதும் மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகளை சந்தித்த கடலூர் மாவட்டத்தில் படிப்படியாக இயல்புநிலை திரும்பி வருகிறது. ஆனால், மழை-வெள்ள நீர் இன்னும் வடியாத பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுகாதார கேடுகளின் விளைவாக நோய் பரவுவதற்கான ஆபத்தும் அதிகரித்திருக்கிறது.

கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற போர்க்கால வேகத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நோய்த்தடுப்புப் பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களையும் நடத்த வேண்டும்.

அண்டை மாநிலமான புதுச்சேரியில், தமிழகத்தை ஒப்பிடும்போது, மழை-வெள்ள பாதிப்பு குறைவுதான். ஆனால், அந்த மாநிலத்தில் மஞ்சள் குடும்ப அட்டை, சிவப்பு குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு, அதாவது அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று புதுவை அரசு அறிவித்திருக்கிறது. அதேபோல், தமிழ்நாட்டிலும் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்க அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story