கொரோனா பரவலை தடுக்க‌ கூடுதல் கட்டுப்பாடுகள் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை


கொரோனா பரவலை தடுக்க‌ கூடுதல் கட்டுப்பாடுகள் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
x
தினத்தந்தி 4 Jan 2022 8:25 PM GMT (Updated: 4 Jan 2022 8:25 PM GMT)

பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் போது கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா? என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகை விரைவில் கொண்டாடப்படுகிறது. அப்போது மக்கள் பல்வேறு வகையான கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள். காணும் பொங்கலின்போது உறவினர்கள் ஒன்றுகூடி மகிழ்ந்து இருப்பது வழக்கமாக உள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் கொண்டாட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

என்னென்ன கட்டுப்பாடுகள்?

இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை வகுப்பது, பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது போன்றவை குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆய்வு செய்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது, பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்தும், பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்துவது குறித்தும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story