மழை வெள்ள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


மழை வெள்ள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Jan 2022 12:30 AM GMT (Updated: 8 Jan 2022 12:30 AM GMT)

மழை வெள்ள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படுவதாகவும் சட்டசபையில முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசியவர்களுக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ​

மழை வெள்ள பாதிப்பு

சமீபத்தில் சென்னையில் ஒரே நாளில் 2 முறை கனமழை கொட்டித்தீர்த்திருக்கிறது. கொட்டித்தீர்த்தது என்று சொல்வதைவிட, ஏதோ வானைப் பிளந்து ஊற்றுவதுபோல மழை சென்னை மாநகர வீதிகளை நிரப்பியது. ஒவ்வொரு முறையும் மழை வெள்ள பாதிப்பு வந்தவுடன் முதல் ஆளாக களத்தில் நிற்கிறவர்தான் உங்களுடைய முதல்-அமைச்சர்.

மக்களின் துயரங்களை நேரில் கேட்டு, அவற்றைச் சீர்படுத்துவதற்கு, துடைப்பதற்கு, துன்ப, துயரங்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம். நமது அமைச்சர்களும், ஏன் நம்முடைய அதிகாரிகளும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் அவரவர் தொகுதிகளில் மழை வெள்ள நிவாரணப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு, விவசாயிகளுக்கும், மக்களுக்கும் ஏற்பட்ட இன்னல்களை துடைத்தெறிவதில் பொறுப்புடன் செயல்பட்டிருக்கிறார்கள்.

ரூ.1,000 கோடி ஒதுக்கீடு

தேசிய பேரிடர் நிவாரண நிதிக்காக இந்த அரசு காத்திருக்கவில்லை. மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.801 கோடி அதற்கென ஒதுக்கி பணிகளை முடுக்கி விட்டோம்; நிவாரண உதவிகளை வழங்கினோம். இதற்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைத்து ஆலோசனைகளை அவர்களிடத்தில் இருந்து பெற்றோம்; தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறோம். அந்த ஆலோசனைகளின் அடிப்படையில்தான் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் செயல்படுத்திட, நகராட்சி நிர்வாகத்துறை, நீர்வளத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை போன்ற பல துறைகள் இணைந்து அந்த திட்டங்களைச் செயலாற்ற வேண்டியிருக்கிறது.

இந்த பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும். உடனடியாக இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்படும். இயற்கைப் பேரிடர்களில் இருந்து மக்களைக் காப்பதில் இந்த அரசு உறுதியோடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, அடுத்த பருவமழை வருகிறபோது, சென்ற மழையின் துயரங்கள் மக்களுக்கு துளியும் இருக்கக்கூடாது என்பதை மனதில் வைத்து இந்த அரசு தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

வரலாற்று சாதனை

காவிரி டெல்டாவில் ரூ.61 கோடி செலவில் குறுவை சாகுபடித் தொகுப்பு வழங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள். மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீரைத் திறந்து, கால்வாய்களை முன்கூட்டியே தூர்வாரிய காரணத்தால் 4.9 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்து வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் என்று பெயர் சூட்டிய தலைவர் கருணாநிதியினுடைய வழியிலே மாற்றுத்திறனாளிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, ஒரு அறிவிப்பை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடுமையான இயலாமை; கடுமையான அறிவுசார் குறைபாடு; தசைச்சிதைவுகள் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்புத் தொகையாக வழங்கப்பட்டுக்கொண்டிருக்கக்கூடிய ரூ.1,500 இனி ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 254 பேர் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ஆண்டொன்றிற்கு ரூ.123 கோடியே 75 லட்சம் கூடுதல் செலவாகும்.

அ.தி.மு.க.வினருக்கு தகுதி இல்லை

கவர்னர் உரையைப் படிக்கத் தொடங்கியவுடனே அன்று எதிர்க்கட்சி தலைவர் வெளிநடப்பு செய்து, வெளியில்போய் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்தபோது என்ன சொன்னாரென்றால், மழை, வெள்ளம் குறித்தும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும் சொல்லியிருக்கிறார். மழை வெள்ளம் குறித்து பேச அ.தி.மு.க.வினருக்கு எந்த தகுதியும் இல்லை; எந்த தார்மீக உரிமையும் கிடையாது.

ஏனென்றால், 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எந்தவித முன்னறிவிப்பும் செய்யாமல், செம்பரம்பாக்கம் ஏரியை நள்ளிரவில் திறந்துவிட்டு, சென்னை மாநகரத்தையே மிதக்க விட்டனர்; நூற்றுக்கணக்கானோர் மாண்டனர்; வீடுகளும், குடிசைகளும் மூழ்கின; ஏழை-நடுத்தர மக்கள் உடைமைகளை இழந்தனர்; சொந்த ஊரிலேயே தமிழர்கள் அகதிகளாக அலைந்தனர்; இது இயற்கைப் பேரிடர் இல்லை; செயற்கைப் பேரிடர் என்று பத்திரிகைகள் தலையங்கம் எழுதின; கடைசியில், புண்ணுக்குப் புனுகு தடவுவதைப் போல, நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.

நாட்டு மக்களுக்கு தெரியும்

மழை, வெள்ளம்தான் இப்படியென்றால், சட்டம்-ஒழுங்கு குறித்து பேசுவதற்காவது அவர்களுக்கு தகுதி இருக்கிறதா? கோடநாடு கொலை. கொள்ளையில் தொடங்கி, பொள்ளாச்சி பாலியல் விவகாரங்கள், குட்கா வரை பல்வேறு முத்திரைகளை பதித்தவர்கள்தான் அவர்கள். நான் சொல்லித் தெரியவேண்டுமா? நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.

இவற்றை எல்லாம் விரிவாப் பேசி சட்டசபையை, சத்த சபையாக மாற்ற நான் விரும்பவில்லை. குற்றம் சாட்டுவதற்கு முன்பாக தன் கையில் கறை இருக்கின்றதா என்பதைப் பார்த்துவிட்டுப் பேசவேண்டும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் நடக்கின்றது என்று பத்திரிகைச் செய்திகளை வைத்து எங்கேயாவது குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருக்கின்றார்களா?. தப்பிய ஒரேயொரு குற்றவாளியையும் 5-ந்தேதி கைது செய்துவிட்டோம். வேறு யாராவது தலைமறைவாக இருக்கின்றார்களா, இருந்தால் சொல்லச் சொல்லுங்கள். பதுங்கும் எவரையும் இந்த அரசு பாய்ந்து பிடிக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டியதால்தான் இன்றைக்கு தொழில் வளர்ச்சியில், புதிய முதலீடுகளை நம்மால் ஈர்க்கமுடிகிறது. புதிய அத்தியாயத்தை இந்த அரசு எழுதிக் கொண்டிருக்கிறது. ஒரகடத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் மருத்துவக் கருவிகள் பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. நாட்டுக்கே முன்னோடியாக தூத்துக்குடியில் மாபெரும் அறைகலன் பூங்கா 1,100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த 2 பூங்காக்கள் மூலம் மட்டும் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட இருக்கின்றது.

2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு லட்சம் கோடி டாலர் என்கிற இலக்கை எட்டுவதற்காகத்தான் நாங்கள் தினமும் உழைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த முதல் முகவரியாக தமிழ்நாட்டை மாற்ற இந்த அரசு உறுதி பூண்டிருக்கிறது.

இது ஒளிவுமறைவற்ற அரசு மட்டுமல்ல; அனைவருக்கும் ஒளிதரும் அரசு. இது சொன்னதைச் செய்யும் அரசு மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யும் அரசு. இது ஒரு கட்சியின் அரசு அல்ல, ஓர் இனத்தின் அரசு. இது தனிப்பட்ட ஸ்டாலினின் அரசு அல்ல, கோடிக்கணக்கான ஸ்டாலின்களின் எண்ணங்களைச் செயல்படுத்தும் அரசு. நாங்கள் இந்த பக்கம், நீங்கள் அந்த பக்கம் என்று ஓர் அடையாளத்துக்காகத்தான் உட்கார்ந்திருக்கிறோம்.

கவர்னர் உரை வழிகாட்டல்

நாம் எல்லோரும் சேர்ந்து மக்களின் பக்கம்தான் என்பதை மக்களுக்கு சேவை செய்வதன் மூலமாக காட்டி, எதிர்காலத் தமிழகத்தை ஒளிமயமானதாக அமைப்போம். அதற்கு இந்த கவர்னர் உரை நிச்சயமாக வழிகாட்டியிருக்கிறது.

இந்த அரசு நடைபோடும் பாதையை அடையாளப்படுத்தும் உரையை ஆற்றிய கவர்னருக்கு மீண்டும் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். எல்லைகளை மறந்து மக்கள் நிலையை உணர்ந்து இந்த கவர்னர் உரையை மனப்பூர்வமாக வரவேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story