பொங்கல் பண்டிகைக்கு பிறகும் தமிழகத்தில் முழுஊரடங்குக்கு அவசியம் இல்லை அமைச்சர் தகவல்


பொங்கல் பண்டிகைக்கு பிறகும் தமிழகத்தில் முழுஊரடங்குக்கு அவசியம் இல்லை அமைச்சர் தகவல்
x

பொருளாதாரம் பாதிக்க கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்ப தாகவும், பொங்கல் பண்டிகைக்கு பிறகும் தமிழகத்தில் முழு ஊரடங்குக்கு அவசியம் இல்லை எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் 13,990 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அது நேற்று 15,379 ஆக அதிகரித்தது.

முழுநேர ஊரடங்கு

தற்போது தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழுஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு பின்னர் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் முழுஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுத்து உள்ளார். தமிழகத்தில் முழுஊரடங்குக்கு அவசியம் இல்லை என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

எந்த அவசியமும் இல்லை

சென்னை திருவான்மியூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பொங்கலுக்கு பிறகு தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? இதுதொடர்பாக தமிழக அரசிடம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பதில் வருமாறு:-

தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்துவதற்கு எந்த அவசியமும் இல்லை. தொடர்ச்சியாக முழு ஊரடங்கு அமல்படுத்தி பொருளாதார பாதிப்பு ஏற்பட கூடாது என்பதிலும், மக்களின் வாழ்வாதாரம் எந்தவகையில் பாதிக்கக்கூடாது என்பதிலும் முதல்-அமைச்சர் உறுதியாக இருக்கிறார். அதனால் தான் தமிழகத்தில் சிறிது சிறிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்தால் எதிர்காலத்தில் ஊரடங்கை நீட்டிக்கவும், கடுமையாக்கவும், வேகப்படுத்தவும் அவசியம் இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழிப்புணா்வு

முன்னதாக சென்னை திருவான்மியூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீட்டுத்தனிமையில் உள்ள நபர்களுக்கு ஆக்சிஜன் அளவினை சரிபார்த்து கொள்ள பல்ஸ் ஆக்ஸிமீட்டர்களை மா.சுப்பிரமணியன் வழங்கினார். மேலும், முககவசங்கள் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வினை ஏற்படுத்தி, தொலைபேசி ஆலோசனை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களை தொலைபேசியில் அழைத்து அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தார். இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

திருவான்மியூர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 10-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் அளவு 92-க்கு கீழே இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை மேற்கொள்ளவும், 92-க்கு மேலே ஆக்சிஜன் அளவு இருப்பவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும் டாக்டர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஒமைக்ரான் பரிசோதனை நிறுத்தம்

சென்னையில் தினசரி 6 ஆயிரத்துக்கும் அதிகமான நபர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது, 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 21 ஆயிரத்து 987 நபர்கள் வீட்டுத் தனிமையில் உள்ளனர். இவர்களின் உடல்நிலை குறித்து கண்காணிக்க 200 வார்டுகளிலும், கொரோனா களப்பணியாளர் கள், டாக்டர்கள், மருத்துவக் குழுக்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொற்று அறிகுறியுள்ள நபர்கள் மற்றும் மூச்சுத்திணறல் உள்பட இதர பாதிப்புள்ள நபர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 250 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது ஏற்படும் கொரோனா தொற்றில் 85 சதவீதம் நபர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறியும், 15 சதவீத நபர்களுக்கு டெல்டா வகை தொற்றும் ஏற்படுகிறது. ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்வதற்கு மத்திய அரசின் மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு மாதிரிகள் அனுப்பி பரிசோதனை முடிவுகள் வருவதற்குள், நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விடுகின்றனர். எனவே தற்போது, ஒமைக்ரான் பரிசோதனையை நிறுத்திவிட்டோம்.

மெகா தடுப்பூசி முகாம்

ஆனால், கிளஸ்டர் பகுதியில் இருந்து பெறப்படும் மாதிரிகளை தொடர்ந்து மத்திய அரசு மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவர்களுக்கு ‘எஸ் ஜீன்’ குறைபாடு மட்டும் இருக்கிறதா? அல்லது வேறு ஏதேனும் புதுவகை மாறுபாடு தொற்று இருக்கிறதா என்பது கண்டறிய முடியும். பூஸ்டர் தடுப்பூசிக்கு தகுதி உடையவர்களின் எண்ணிக்கை, ஜனவரி மாத இறுதிக்குள் 10 லட்சமாக உயரும். இந்திய அளவில் 15 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு 1.50 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் மட்டும் 22.50 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் பொங்கல் விடுமுறை அவசியமான ஒன்றாக இருக்கிறது. எனவே வரும் சனிக்கிழமை நடைபெற இருந்த 19-வது மெகா தடுப்பூசி முகாம் அடுத்த சனிக்கிழமைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன், வேளச்சேரி எம்.எல்.ஏ. அசன் மவுலானா, மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச்செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story