அனைத்து வகை பிளாஸ்டிக்குகளையும் தடை செய்ய வேண்டும்: அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை


அனைத்து வகை பிளாஸ்டிக்குகளையும் தடை செய்ய வேண்டும்: அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
x
தினத்தந்தி 3 April 2022 9:58 PM GMT (Updated: 3 April 2022 9:58 PM GMT)

மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் மென்துகள்கள்: அனைத்து வகை பிளாஸ்டிக்குகளையும் தடை செய்ய வேண்டும் அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஹாலந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் மென்துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மனித உடலிலும், ரத்தத்திலும் பிளாஸ்டிக் மென்துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பிளாஸ்டிக்குகளால் மனித குலத்துக்கே ஆபத்து ஏற்படக்கூடும் என தெரியவந்த பிறகும் இந்த விஷயத்தில் நம்மிடம் விழிப்புணர்வு ஏற்படாதது வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஏராளமான பணிகளை பசுமைத்தாயகம் அமைப்பின் மூலம் பா.ம.க. செய்திருக்கிறது. பல நிகழ்ச்சிகளை நானே முன்னின்று நடத்தியுள்ளேன். ஆனாலும் பிளாஸ்டிக் ஒழிப்பில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை எட்ட முடியாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

பிளாஸ்டிக் கழிவு உலக தீமையாக மாறி வரும் நிலையில், அதை அனைத்து நாடுகளும் இணைந்து அகற்றவேண்டும். அதற்கான பிளாஸ்டிக் ஒப்பந்தம் 2024-ஐ உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூலம் நடத்தப்பட்டு வரும் நிலையில், பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்கும் வகையில் ருவாண்டா-பெரு நாடுகள் உருவாக்கிய வரைவு ஒப்பந்தம் முழுமையாக இருப்பதால் அதை இந்தியா ஆதரிக்க வேண்டும். தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மட்டுமின்றி அனைத்து வகையான பிளாஸ்டிக்குகளையும் அரசு தடை செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story