மேட்டூர் அணையில் இருந்து 26,750 கன அடி தண்ணீர் வெளியேற்றம் - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


மேட்டூர் அணையில் இருந்து 26,750 கன அடி தண்ணீர் வெளியேற்றம் - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x

6 நாட்களுக்கு பின்பு மீண்டும் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூர்,

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே தமிழக மற்றும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் ஒகேனக்கல் முதல் மேட்டூர் இடையிலான காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்கிறது. இந்த மழை நீரும் மேட்டூர் அணைக்கு வருகிறது.

இதனால் நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையில் 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. மாலை 4 மணியளவில் அணைக்கு விநாடிக்கு 21,500 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. அதன் பிறகு மாலை 6 மணிக்கு நீர்வரத்து 26,000 கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து இன்று காலையில் அதே அளவு தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 120 அடியாக நீடிப்பதால் உபரிநீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த வாரம் நீர்வரத்து குறைந்ததால் அணையில் உள்ள உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக நீர் திறப்பு நிறுத்தப்பட்டு மதகு கதவுகள் மூடப்பட்ட நிலையில் நேற்று மாலை மீண்டும் திறக்கப்பட்டது. 16 கண் மதகுகள் வழியாக விநாடிக்கு 4,500 கன அடி வீதமும், நீர்மின் நிலையங்கள் வழியாக 21,500 கன அடி வீதமும் கால்வாயில் 750 கன அடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

6 நாட்களுக்கு பின்பு மீண்டும் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, வருவாய்த்துறை, போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அருவி, காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


Next Story