ஆசிரியரை தாக்கி மோட்டார் சைக்கிள்-தங்க மோதிரம் பறித்த 3 பேர் கைது


ஆசிரியரை தாக்கி மோட்டார் சைக்கிள்-தங்க மோதிரம் பறித்த 3 பேர் கைது
x

மண்ணச்சநல்லூர் அருகே ஆசிரியரை தாக்கி மோட்டார் சைக்கிள்-தங்க மோதிரம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி

சமயபுரம், மே.29-

மண்ணச்சநல்லூர் அருகே ஆசிரியரை தாக்கி மோட்டார் சைக்கிள்-தங்க மோதிரம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியர்

ஸ்ரீரங்கம் அருகே உள்ள அயலாபேட்டையைச் சேர்ந்தவர் ஞானசுந்தரம். இவரது மகன் சத்யராஜ் (வயது 31). பட்டதாரியான இவர் போதாவூரில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 25-ந்தேதி சத்யராஜ் ஸ்ரீரங்கத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் நொச்சியத்திற்கு வந்துள்ளார். அப்போது, நொச்சியம் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த 4 மர்ம நபர்கள் சத்யராஜை வழிமறித்து கத்தியால் வெட்டி விட்டு அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், தங்க மோதிரம் மற்றும் மணிபர்ஸ் உள்ளிட்டவைகளை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.

3 பேர் கைது

இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தார். இந்நிலையில் நேற்று திருச்சி -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நொச்சியம் ரெட்டை மண்டபம் என்ற இடம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த நொச்சியம் கீழத்தெருவை சேர்ந்த கலைசெல்வன் மகன் ரங்கராஜ் (24), குமார் மகன் குணா என்ற குணசீலன் (19), மற்றொரு குமார் என்பவர் மகன் ஸ்டீபன் என்ற கணேஷ்பாபு (19) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 3 பேரும் ஆசிரியர் சத்யராஜியிடம் மோட்டார் சைக்கிள், மோதிரத்தை பறித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் 3 பேரும் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story