தஞ்சை வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது
தஞ்சை வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது
தஞ்சையில் குடிபோதையில் வாலிபரை கொலை செய்து முகத்தை சிதைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் டாஸ்மாக் கடையில் கடன் கேட்டு ரகளையில் ஈடுபட்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
வாலிபர்
தஞ்சை கரந்தை குதிரைக்கட்டி தெருவை சேர்ந்தவர் பிரதீப் (வயது 23). இவர் தனது வீட்டில் அப்பளம் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இவர் மீது வெளி மாவட்டங்களில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரதீப் வீட்டில் இருந்தபோது அவரை 3 வாலிபர்கள் வந்து அழைத்துள்ளனர். வீட்டிற்குள் இருந்து பிரதீப் வெளியே வந்துள்ளார். அவரிடம் அந்த 3 வாலிபர்களும் ஏதோ விவரம் கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வெட்டிக்கொலை
தொடர்ந்து அந்த 3 வாலிபர்களும் தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாள் மற்றும் ஆயுதங்களால் பிரதீப்பை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து பிரதீப் சம்பவ இடத்திலேயே இறந்தார். இருப்பினும் ஆத்திரம் அடங்காத அந்த 3 பேரும் பிரதீபின் முகத்தை சிதைத்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரதீப் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
3 பேர் கைது
மேலும் கொலையாளிகள் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பிரதீப்பை வெட்டி கொலை செய்தது கரந்தை பகுதியை சேர்ந்த சின்னதுரை என்பவரின் மகன் விக்னேஷ் (26), கீழ அலங்கம் பகுதியை சேர்ந்த தனபால் என்பவரின் மகன் சிவக்குமார் (25), வடக்குவாசல் பகுதியை சேர்ந்த சூர்யா என்பது தெரிய வந்தது. பிரதீப்பிடம் கஞ்சா கேட்டதாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில், அவரை கொலை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து விக்னேஷ், சிவக்குமார், சூர்யா உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 3 பேரும் நேற்று முன்தினம் மாலை கரந்தை பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கடன்கேட்டு ஊழியர்களை மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டதோடு, ஆயுதங்களை காட்டி தாக்கவும் முயற்சி செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.