சாலையோர புளிய மரத்தில் கார் மோதி 3 பேர் காயம்


சாலையோர புளிய மரத்தில் கார் மோதி 3 பேர் காயம்
x

தா.பழூர் அருகே கோவிலுக்கு சென்றபோது சாலையோர புளிய மரத்தில் கார் மோதி 3 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர்

விபத்து

சென்னை அடையார் வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வருபவர் நாகராஜ்(வயது 67). இவர் தனது குடும்பத்தாருடன் கும்பகோணம் அருகே உள்ள கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்னையில் இருந்து தனக்கு சொந்தமான காரில் கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். காரில் அவருடைய மனைவி ஜமுனா(62), நாகராஜின் அண்ணன் கணபதி ராமன்(80), கணபதி ராமனின் மனைவி லலிதா(70) ஆகியோர் ஒன்றாக பயணம் செய்தனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மதனத்தூர் போலீஸ் சோதனை சாவடி அருகே அவர்கள் பயணம் செய்தபோது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.

ஆம்புலன்ஸ் வர தாமதம்

இந்த சம்பவத்தின்போது காரில் பயணம் செய்த அனைவரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் காரில் இருந்த ஏர் பேக் தொழில்நுட்பம் உடனடியாக செயல்பட்டு அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையை ஏற்படுத்தியது. ஆனாலும் காரை ஓட்டி வந்த நாகராஜ் தவிர மற்ற 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற உடன் போலீஸ் சோதனை சாவடியில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

வழக்கமாக தா.பழூரில் காத்திருக்கும் 108 ஆம்புலன்ஸ் நேற்று இல்லாத காரணத்தால் ஜெயங்கொண்டத்தில் இருந்து ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டது. விபத்து நடைபெற்று சுமார் 1 மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வராததால் விபத்தில் காயம் அடைந்தவர்கள் விபத்து நடைபெற்ற இடத்திலேயே சுமார் 1 மணி நேரம் வலியோடு காத்திருந்தனர்.

கோரிக்கை

அதன்பிறகு ஆம்புலன்ஸ் வந்ததும் அவர்களை போலீசார் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காரில் பயணம் செய்த அனைவரும் சீட் பெல்ட் அணிந்ததால் உயிர் பிழைத்த சம்பவமும், விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு 1 மணி நேரம் வரை சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வராததும் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

தா.பழூர் பகுதி அதிக போக்குவரத்து உள்ள பகுதியாக மாறிவிட்டதால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. எனவே தா.பழூர் பகுதிக்கு குறைந்தது 2 ஆம்புலன்சுகள் வழங்கப்பட்டு, எந்த நேரத்திலும் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story