கேரளாவுக்கு கடத்த முயன்ற 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கேரளாவுக்கு கடத்த முயன்ற            3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

தக்கலை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 3½ டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் 15 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 3½ டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் 15 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை

தக்கலை வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் மற்றும் அலுவலக பணியாளர்கள் நேற்று முன்தினம் இரவு அழகியமண்டபம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கேரள பதிவெண் கொண்ட ஒரு மினி டெம்போ வேகமாக வந்தது. அதை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காட்டினர்.

ஆனால் டிரைவர் ெடம்போவை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் தங்களது வாகனத்தில் டெம்போவை துரத்தி சென்றனர். அதிகாரிகள் பின்னால் துரத்தி வருவதை பார்த்த டிரைவர் சுவாமியார்மடம், இரவிபுதூர்கடை, சிராயன்குழி வழியாக பயணம் நோக்கி வேகமாக சென்றார். அதிகாரிகளும் பின்தொடர்ந்து சென்றனர். சினிமாவில் வரும் காட்சி போல் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து சாலையோரம் நின்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

3½ டன் ரேஷன் அரிசி

சுமார் 15 கிேலா மீட்டர் தூரம் கடந்து திக்குறிச்சி பகுதியில் சென்ற போது டிரைவர் டெம்போவை நிறுத்தி விட்டு இறங்கி தப்பி ஓடினார். தொடர்ந்து அதிகாரிகள் அந்த மினி டெம்போவை சோதனை செய்தபோது அதில் 3½ டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

விசாரணையில் இந்த அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அரிசியுடன் வாகனத்தை பறிமுதல் செய்து தக்கலையில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அரிசியை உடையார்விளை அரசு குடோனில் ஒப்படைத்தனர்.


Next Story