பூக்கள் விலை 4 மடங்கு உயர்வு


பூக்கள் விலை 4 மடங்கு உயர்வு
x
திருச்சி

விநாயகர் சதுர்த்திவிழா இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு நேற்று திருச்சியில் பூக்களின் விலை 4 மடங்கு உயர்ந்துள்ளது. சிலைகள் விற்பனையும் அதிகரித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா

பண்டிகை நாட்கள் வந்துவிட்டாலே பூக்கள், பழங்கள் விலை அபரிமிதமாக உயர்வது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது ஆவணி மாதத்திற்கான திருமண முகூர்த்தங்கள் தொடங்கி சுபநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பூக்கள் விலை கடந்த 2 வாரமாக உயர்ந்து காணப்படுகிறது.

இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்திவிழா கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக களையிழந்து காணப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவை இந்த ஆண்டு வெகு விமரிசையாக கொண்டாட பொதுமக்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

பூக்கள் விலை உயர்வு

இதனால் நேற்று காலை முதலே திருச்சி காந்திமார்க்கெட்டில் பூக்கள், பழங்கள், கரும்பு, அருகம்புல், விநாயகர் சிலை என்று பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்க மக்கள் திரண்டு வந்தனர். இதனால் மார்க்கெட், பெரியகடைவீதி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் கூட்டம் அலை மோதியது.

மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காந்தி மார்க்கெட்டில் பூக்கள் விலை 4 மடங்கு அதிகரித்து காணப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை ரூ.200-க்கு விற்பனையானது. நேற்று ரூ.800 முதல் ரூ.1,000 வரை விற்பனையானது.

சிலைகள் விற்பனை

இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.100-க்கு விற்பனையான சம்பங்கி, நேற்று ரூ.250-க்கும், ஜாதி மல்லி ரூ.1,000-க்கும், கோழிக்கொண்டை ரூ.150-க்கும், ரோஜா ரூ.240-க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும், பிச்சிப்பூ, செவ்வந்தி ரூ.150 முதல் ரூ.200-க்கும், மரிக்கொழுந்து ரூ.40-க்கும், அரளிப்பூ ரூ.280 முதல் 320 என்ற விலையில் நேற்று விற்பனையானது.

இதுபோல், வாழைப்பழங்கள், ஆப்பிள், கொய்யா உள்ளிட்ட பழங்களின் விலையும் நேற்று சற்று உயர்ந்து இருந்தது. மேலும் பொரி விற்பனையும், விநாயகர் சிலைகள் விற்பனையும் அமோகமாக நடைபெற்றது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் விலை சற்று உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஊரக பகுதிகள்

இதேபோல் மணப்பாறை, துவரங்குறிச்சி, துறையூர், தா.பேட்டை, தொட்டியம், திருவெறும்பூர், லால்குடி, முசிறி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைவீதிகளில் விநாயகர் சதுர்த்தி பூஜை பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பூக்கள் விலை உயர்ந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் அதனை ஆர்வமாக வாங்கி சென்றனர்.


Next Story