4-வது நாளாக தொடர்ந்து ஈரோட்டில் இரவில் மழை கொட்டியது; ரோடுகளில் பெருக்கெடுத்த வெள்ளம்


4-வது நாளாக தொடர்ந்து  ஈரோட்டில் இரவில் மழை கொட்டியது;  ரோடுகளில் பெருக்கெடுத்த வெள்ளம்
x

ஈரோட்டில் 4-வது நாளாக நேற்று இரவும் மழை கொட்டியதால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஈரோடு

ஈரோட்டில் 4-வது நாளாக நேற்று இரவும் மழை கொட்டியதால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

4-வது நாளாக மழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 25-ந் தேதி மாலையில் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. இதுபோல் நேற்று முன்தினம் மாலையும் சாரலாக தொடங்கிய மழையானது தொடர்ந்து நீடித்தது.இரவு வரை விடாமல் கொட்டித்தீர்த்த மழையால் ஈரோடு மாநகர பகுதி முற்றிலும் வெள்ளக்காடானது. இப்படி தொடர்ந்து 4-வது நாளாக நேற்று இரவும் மழை கொட்டியது.

சாலைகளில் வெள்ளம்

நேற்று காலையிலேயே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மாலையில் வழக்கம் போல மழை வருவதற்கான அறிகுறிகள் தோன்றினாலும் மழை பெய்யவில்லை. இந்த நிலையில் இரவு 8 மணிக்கு மேல் குளிர்ந்த காற்று வீசியது. சில இடங்களில் காற்று வேகமாக வீசியது. தொடர்ந்து இடி -மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இரவு 10 மணியை கடந்தும் மழை கொட்டிக்கொண்டே இருந்தது.

ஈரோடு மாநகரின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் சாலைகளில் தண்ணீர் ஓடியது. பாதாள சாக்கடை தொட்டிகளில் இருந்து கழிவு நீர் சாலைகளில் கொப்பளித்தது. ஏற்கனவே 3 நாட்கள் பலத்த மழை பெய்து மண் ஈரமாக இருந்ததால் மழை பெய்த சில நிமிடங்களிலேயே வயல் வெளிகள் என ஈரோடு வெள்ளக்காடாக மாறியது. பள்ளங்களில் ஏற்கனவே தண்ணீர் தேங்கி கிடந்ததால் அனைத்து பகுதிகளிலும் சாலைகளில் தண்ணீர் காட்டாறு போல ஓடியது.

விடுமுறை விடப்படுமா?

பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை, கொல்லம்பாளையம் ஓடை, மழை நீர் வடிகால்கள், சாக்கடை கால்வாய்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பள்ளமான பகுதி வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. அந்த வீடுகளில் வசிக்கும் மக்கள் இரவு தூங்கும் நேரத்தில் அவதிப்பட்டனர். மழை நள்ளிரவு வரை நீடித்தது. காலை வரை மழை நீடித்தால்,

மழை காரணமாக இன்று (திங்கட்கிழமை) பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள், மாணவ- மாணவிகளிடம் எழுந்து உள்ளது.


Related Tags :
Next Story