திருச்சியில் 5 பஸ்கள் உள்பட 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 37 பேர் காயம்


திருச்சியில் 5 பஸ்கள் உள்பட 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து:  37 பேர் காயம்
x
தினத்தந்தி 3 Nov 2023 7:29 AM GMT (Updated: 3 Nov 2023 7:38 AM GMT)

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருச்சி,

சென்னையில் இருந்து சாயல்குடி நோக்கி தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. பஸ்சை விருதுநகரை சேர்ந்த மாரிசாமி ஓட்டினார். இன்று அதிகாலை 3 மணி அளவில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோரையாற்று பாலம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், செட்டியாபட்டி, கோரையாற்று பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது

அப்போது அந்த பஸ்சை பின் தொடர்ந்து வந்த 2 தனியார் பஸ்களும் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றன்பின் ஒன்றாக மோதின. இதையடுத்து விபத்துக்குள்ளான பஸ்களின் டிரைவர்கள் இறங்கி நின்று ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த லாரி மூன்றாவது பஸ்சின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளாகியது.

மழை பெய்து கொண்டிருந்ததால் இந்த விபத்துக்கள் குறித்து அறியாத மேலும் இரண்டு பஸ்கள் விபத்தில் சிக்கிய வாகனங்கள் மீது அடுத்தடுத்து வந்து மோதின. ஒன்றன்பின் ஒன்றாக வந்த 5 பஸ்களும், ஒரு லாரியும் அடுத்தடுத்து மோதிக்கொண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். இந்த விபத்தில் 2 டிரைவர்கள், 3 பெண்கள், 2 ஆண்கள் என 7 பேருக்கு தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் 30- பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

காயம் அடைந்த பயணிகள் அனைவரும் திருச்சி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து வெளியூருக்கு சென்ற வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு அணி வகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்த எடமலைப்பட்டி புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து தொடர்பாக எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story