சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறைவிழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் முருகன் (வயது 32), கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த 7 வயதுடைய சிறுமி 3-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 12.7.2020 அன்று சிறுமியின் தாய், கூலி வேலைக்கு சென்றிருந்தார். வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்தாள்.
இதையறிந்த முருகன், சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சிறுமியிடம் சாப்பிடுவதற்கு தோசை ஊற்றி தருவதாக கூறி அவளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதனிடையே வேலைக்கு சென்று வீடு திரும்பிய தனது தாயிடம் நடந்த சம்பவத்தை பற்றி கூறி சிறுமி அழுதாள்.
தொழிலாளிக்கு சிறை
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், இதுபற்றி விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட முருகனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,500 அபராதம் விதித்தும், மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அரசு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட முருகன், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலா ஆஜரானார்.