கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திருமங்கலத்தில் 5 ஆயிரம் கடைகளை அடைத்து போராட்டம்


கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திருமங்கலத்தில் 5 ஆயிரம் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோ, கார்களும் ஓடவில்லை.

மதுரை

திருமங்கலம்

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திருமங்கலத்தில் 5 ஆயிரம் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோ, கார்களும் ஓடவில்லை.

சுங்கச்சாவடி

மதுரையை அடுத்த கப்பலூரில் சுங்கச்சாவடி உள்ளது. சுங்கச்சாவடிகள் நகராட்சி எல்லையில் இருந்து 4 கிலோ மீட்டருக்கு அப்பால் அமைய வேண்டும் என்பது விதி. ஆனால் கப்பலூரில் சுங்கச்சாவடி திருமங்கலம் நகராட்சி எல்லைப்பகுதியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டு உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் உள்ளூர் வாகனங்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதித்து வசூல் செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தன.

திருமங்கலம் பகுதி வாகன உரிமையாளர்களுக்கும், கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அடிக்கடி மோதல் ஏற்பட்டது.

அடிக்கடி மோதல்

நான்கு வழிச்சாலையை பயன்படுத்தாத டி.கல்லுப்பட்டி, பேரையூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட பகுதியிலிருந்து வந்து செல்லும் வாகனங்களுக்கும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

எனவே இந்த சுங்கச்சாவடியை அகற்றக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. போராட்டம் நடத்தும் சமயங்களில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்வதிலிருந்து விலக்கு அளிப்பதும், பின்னர் சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் கட்டணம் வசூலிப்பதும் வாடிக்கையாக இருக்கிறது.

இந்த பிரச்சினை தொடர்பாக கலெக்டர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டு உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், சுங்கசாவடி நிர்வாகம், கட்டண வசூலிப்பில் இருந்து பின்வாங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஒருங்கிணைப்பு குழு

இதைெதாடர்ந்து திருமங்கலம் பகுதி வாகன உரிமையாளர்கள் இணைந்து, சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவை தொடங்கினர். இந்த குழுவினர், கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்தும், சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கடையடைப்பு அறிவித்தனர்.

அதன்படி நேற்று திருமங்கலம் நகர் பகுதி முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடந்தது. பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. இதனால் திருமங்கலத்தில் காய்கறி கடைகள், சிறிய, பெரிய கடைகள், உணவகங்கள் உள்பட 5 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோ, கார்கள், வேன்கள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை.

போராட்டம்

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி திருமங்கலம் ராஜாஜி சிலை அருகே அனைத்து சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில், திருமங்கலம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார். அவர் பேசும்போது கூறியதாவது:-

கப்பலூர் சுங்கச்சாவடியில் திருமங்கலம் பகுதி வாகன ஓட்டிகளிடம் கட்டாய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் மத்திய மந்திரியிடம் பேசி திருமங்கலம் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று சுங்க கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு பெற்று தரப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியின்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்படும் என உறுதி அளித்தார். ஆனால் தற்போது வரை அதை நிறைவேற்றவில்லை. கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற திருமங்கலம் பகுதி மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு அ.தி.மு.க. எப்போதும் ஆதரவு அளிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கப்பலூர் சிட்கோ தொழில் அதிபர்கள் சங்கம், திருமங்கலம் வக்கீல் சங்கம் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டன. கோர்ட்டு பணியை புறக்கணித்து வக்கீல் சங்க தலைவர் ராமசாமி தலைமையில் வக்கீல்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அருண், முன்னாள் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயராமன், வியாபாரிகள் சங்கங்களை சேர்ந்த விஜயராசன், மணிசேகர் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


Next Story