ஒரே வாரத்தில் 55 பேர் கைது
நீலகிரியில் கஞ்சா வேட்டையில், ஒரே வாரத்தில் 55 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
ஊட்டி,
தமிழகத்தில் போதைப்பொருள்களை முற்றிலும் தடுக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், 'ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0' என்ற சிறப்பு நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில், போலீசார் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். மேலும் கடந்த ஒரு வாரமாக கஞ்சா வியாபாரிகள் கைது நடவடிக்கை முடுக்கி விடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, நீலகிரியில் கடந்த ஒரு வாரத்தில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு, கஞ்சா விற்பனை தொடர்பாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் 55 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதேபோல் குற்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று நன்னடத்தை பத்திரம் ஒப்படைத்து, மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்ட 39 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் கஞ்சா விற்றவர்களின் சொத்துகள் மற்றும் வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.