6 மயில்கள் சாவு
6 மயில்கள் பரிதாபமாக இறந்தது.
லாலாபேட்டை அருகே உள்ள பிள்ளபாளையத்தை சேர்ந்தவர் மாரியாயி. இவருக்க சொந்தமான தோட்டத்தில் 1½ ஏக்கர் நிலத்தை மகளிப்பட்டியை சேர்ந்த முருகானந்தம் (வயது 40) என்பவர் குத்தகைக்கு எடுத்து பீர்க்கங்காய் பயிர்களை சாகுபடி செய்து வந்தார். அந்த செடிகளை மயில்கள் சேதப்படுத்தி வந்தது. இதனால் ஆத்திரமடைந்த முருகானந்தம் நெல்மணியில் விஷத்தை கலந்து தோட்டம் முழுவதும் தெளித்துள்ளார். இறை தேட வந்த 8 மயில்கள் அடுத்தடுத்து இறந்து போனது. இதையடுத்து வனத்துறையினர் விசாரணை நடத்தி முருகானந்தத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் அதே தோட்டத்தின் பகுதியில் கிடந்த விஷம் தெளிக்கப்பட்ட நெல்மணிகளை நேற்று 6 பெண் மயில்கள் தின்று அடுத்தடுத்து இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வன அலுவலர் சாமியப்பன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் 100 நாள் திட்ட பணியாளர்களை கொண்டு தோட்டத்தின் முழுவதையும் சுத்தப்படுத்தி, நெல்மணிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மயில்களின் சாவு எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.