ரவுடிக்கொலை வழக்கில் 6 பேர் கைது


ரவுடிக்கொலை வழக்கில் 6 பேர் கைது
x

நெல்லிக்குப்பம் அருகே ரவுடி கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

ரவுடி வெட்டிக்கொலை

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த பாலூர் சித்தரசூர் காலனி பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் அபயக்குரல் எழுப்பினார். இந்த சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்த மக்கள் உடனடியாக அந்த பகுதிக்கு ஓடி வந்தனர். இதைப்பார்த்து அங்கிருந்த மர்மகும்பல், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தப்பி ஓடினர். அங்கு முகம் சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் நெல்லிகுப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த வாலிபர் புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த பிரபல ரவுடியான முகிலன் (வயது 28) என்பது தெரியவந்தது.

6 பேரிடம் விசாரணை

இதையடுத்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரின் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், சந்தோஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து முகிலனை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் புதுச்சேரி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ்வரன்(32), புதுச்சேரி மூலக்குளம் பகுதியை சேர்ந்த சிராக்(20), புதுச்சேரி ரெட்டியார் பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் கணபதி (27), புவனேஷ் (20), அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் விஷ்வா (23) மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

முன்விரோதம்

விசாரணையில், இறந்த பிரபல ரவுடி முகிலனுக்கும், ரவுடி விக்கி என்பவருக்கும் யார் பெரிய ரவுடி? என்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி இரு தரப்பினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முகிலன் விக்கியை கொலை செய்ய திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கையில் ஈடுபடும் போது முகிலனின் ஆதரவாளர்களை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர். ஆனால் முகிலன் போலீசிடம் இருந்து தப்பித்து தலைமறைவாக இருந்து வந்தார்.

சரமாரியாக வெட்டினர்

அவரை விக்கி தரப்பினர் தேடி வந்த நிலையில் முகிலன் சித்தரசூர் பகுதியில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் முகிலன் சித்திரசூர் பகுதியை சேர்ந்த ஒரு கும்பலுடன் மது அருந்த சென்றபோது விக்கி மற்றும் அவரது தரப்பினரான 9 பேர் கொண்ட கும்பல் முகிலன் இருக்கும் பகுதிக்கு சென்று அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கைது

இதையடுத்து விக்கி, சிராக், கணபதி, புவனேஷ், விஷ்வா, தமிழ், ஹேமநாத், கருவடிக்குப்பம் ஆட்டோ மணி உள்பட 9 பேர் மீது நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்கி உள்பட 6 பேரை கைது செய்தனர். மேலும் இ்ந்த வழக்கில் தொடர்புடைய தமிழ், ஹேமநாத், ஆட்டோ மணி ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கொலை நடந்து 12 மணி நேரத்திற்குள் முக்கிய குற்றவாளிகள் 6 பேரை கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் வெகுவாக பாராட்டினர்.


Next Story