திண்டுக்கல் மாநகராட்சியில் கட்டிட விதிமீறல் 65 பேருக்கு அபராதம்


திண்டுக்கல் மாநகராட்சியில் கட்டிட விதிமீறல் 65 பேருக்கு அபராதம்
x

திண்டுக்கல் மாநகராட்சியில் கட்டிட விதிமீறலில் இடுபட்ட 65 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் கட்டிடம் கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற வேண்டும். அதேபோல் அனுமதி பெற்ற அளவுக்கு மட்டுமே கட்டிடங்களை கட்ட வேண்டும். அதை மீறி கட்டிடங்கள் கட்டுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவின்பேரில் நகரமைப்பு அலுவலர் சேதுராஜன் தலைமையிலான நகரமைப்பு ஆய்வாளர்கள் நகர் முழுவதும் ஆய்வு செய்தனர்.

அப்போது ஆர்.எம்.காலனி, நேருஜிநகர், ரவுண்டுரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் 52 பேர் அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டியது தெரியவந்தது. அதேபோல் 13 பேர் அனுமதி பெற்ற அளவை விட கூடுதலாக கட்டிடம் கட்டி இருந்தனர். இதுதொடர்பாக 65 பேர் மீதும் நகரமைப்பு ஆய்வாளர்கள் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்குகள் மீது திண்டுக்கல் 1, 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் அனுமதியின்றி கட்டிடம் கட்டிய 52 பேருக்கு தலா ரூ.1,100-ம், அனுமதி பெற்ற அளவை விட கூடுதலாக கட்டிடம் கட்டிய 13 பேருக்கு தலா ரூ.1,000-ம் அபராதம் விதிக்கப்பட்டது. இதன்மூலம் மொத்தம் ரூ.70 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கிடையே மாநகராட்சி முழுவதும் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை கண்டறியும் பணியில் நகரமைப்பு ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Next Story