அதிக வட்டி தருவதாக ரூ.7½ லட்சம் மோசடி


அதிக வட்டி தருவதாக ரூ.7½ லட்சம் மோசடி
x

முதலீடு தொகைக்கு அதிக வட்டி தருவதாக முகநூலில் விளம்பரம் செய்து ரூ.7½ லட்சம் மோசடி செய்தவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

முதலீடு தொகைக்கு அதிக வட்டி தருவதாக முகநூலில் விளம்பரம் செய்து ரூ.7½ லட்சம் மோசடி செய்தவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முகநூலில் விளம்பரம்

நாகர்கோவில் தம்மத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் வைகுந்த். இவர் கடந்த 2019-ம் ஆண்டு முகநூலில் ஒரு விளம்பரம் பார்த்தார். அதில் சேலம் மாவட்டம் குளத்தூர் அருகில் உள்ள சிங்கிரிப்பட்டி இடக்காடு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் தனது டிரேடிங் நிறுவனத்தின் மூலம் ரூ.6 ஆயிரம் முதலீடு செய்தால் 150 நாட்களுக்கு ரூ.100 வீதம் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதைப்பார்த்த வைகுந்த், சீனிவாசனை தொடர்பு கொண்டு பேசி விவரம் கேட்டுள்ளார்.

அதற்கு சீனிவாசன், அரசு அங்கீகாரம் பெற்ற மேலும் 2 நிறுவனங்களை நடத்தி வருவதாகவும், அவற்றில் முதலீடு செய்தால் முகநூல் பக்கத்தில் கண்டபடி அதிக வட்டியுடன் நிரந்தர வருமானம் பெறலாம் எனக்கூறியதாகவும் தெரிகிறது.

ரூ.7.60 லட்சம் மோசடி

இதனை நம்பிய வைகுந்த் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.50 ஆயிரத்தை சீனிவாசன் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். 2 நாட்களில் சீனிவாசன் நடத்தி வந்த நிறுவனத்தில் இருந்து வைகுந்த் வங்கி கணக்குக்கு ரூ.800 பணம் வந்துள்ளது. இதையடுத்து சீனிவாசன், வைகுந்தை தொடர்பு கொண்டு மேலும் அதிக பணம் செலுத்தினால் அதிக வருமானம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து வைகுந்த் பல தவணைகளில் மொத்தம் ரூ.7 லட்சத்து 60 ஆயிரம் வரை அந்த நிறுவனங்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தியுள்ளார். பணம் செலுத்தியபிறகு சீனிவாசன், வைகுந்திடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் வைகுந்த் பலமுறை தொடர்பு கொண்டு கேட்டபோது அவரை, சீனிவாசன் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இதனால் சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி வைகுந்த் நாகர்கோவில் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story