இசை பயிற்சி வகுப்புக்கு சென்ற 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. நீலகிரியில் பரபரப்பு
17 வயது சிறுமி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இசை வகுப்புக்கு சென்று வந்தாள்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்தவள் 17 வயது சிறுமி. இவள் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவள் 7 மாத குழந்தையாக இருந்த போது தந்தை இறந்து விட்டார். இதனால் மாணவியின் தாய், அதே பகுதியை சேர்ந்த மற்றொருவரை திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் தாய் மற்றும் வளர்ப்பு தந்தையுடன் தங்கி இருந்து சிறுமி பள்ளிக்கு சென்று வந்தார்.
இதற்கிடையே அவளுக்கு இசை வகுப்பில் சேர ஆர்வம் ஏற்பட்டது. இதனால் பெற்றோரிடம் அனுமதி பெற்று அருவங்காட்டில் உள்ள இசை பயிற்சி பள்ளியில் சேர்ந்தாள். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இசை வகுப்புக்கு சென்று வந்தாள்.
இந்தநிலையில் அந்த பள்ளியில் இசை ஆசிரியராக உள்ள பிரசாந்த் செபாஸ்டியன் என்பவர் சிறுமியுடன் பழகி, அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மற்ற மாணவர்கள் இல்லாத சமயத்தில், இசை வகுப்பில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்து உள்ளார்.
கடந்த 3-ந் தேதி சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவள் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், சிறுமி 9 வார கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் குன்னூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பிரசாந்த் செபாஸ்டியனை போலீசார் கைது செய்தனர்.
இசை கற்றுக்கொள்ள வந்த சிறுமியை இசை ஆசிரியரே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.