ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தின் பெயரில் ரூ.25 லட்சம் பெற்று மோசடி செய்தவர் வழக்கு


ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தின் பெயரில் ரூ.25 லட்சம் பெற்று மோசடி செய்தவர் வழக்கு
x

கரூரில் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தின் பெயரில் ரூ.25 லட்சம் பெற்று மோசடி செய்த ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர்

ஏற்றுமதி நிறுவனம்

கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் டெக்ஸ்டைல் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாடுகளுக்கு தயாரிப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக ஜெர்மனியில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு தயாரிப்பு பொருட்களை அனுப்பி வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.25 லட்சம் மதிப்பிலான ஜவுளிகளை அந்த நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்துள்ளது.

பின்னர் அந்த நிறுவனத்திடம் அதற்குரிய தொகையை வழங்குமாறு கரூர் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தினர் கேட்டுள்ளனர். அதற்கு அந்த நிறுவனத்தினர் 3 மாதங்களுக்கு பிறகு உரிய தொகையை வழங்குவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து 3 மாதங்கள் முடிவுற்ற நிலையில் கரூர் ஏற்றுமதி நிறுவனத்தினர் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு உரிய தொகையை அனுப்புமாறு கேட்டுள்ளனர். அதற்கு அந்த நாட்டு நிறுவனத்தினர் சில நாட்களுக்கு முன்பு அதற்கான தொகையான ரூ.25 லட்சத்தை அனுப்பி விட்டதாக தெரிவித்தனர்.

ரூ.25 லட்சம் மோசடி

இதனையடுத்து ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தினர் வங்கி கணக்கில் சோதனை செய்தபோது அவ்வாறு எந்த பணமும் வரவில்லை என தெரியவந்தது. இதனையடுத்து இந்த நிறுவனத்தின் பெயரில் போலியான மெயில் ஐடியை உருவாக்கி மர்ம நபர் அந்த நிறுவனத்திற்கு அனுப்பி கரூர் ஏற்றுமதி நிறுவனத்தினர் போல் பேசி ரூ.25 லட்சத்திற்கான தொகையை பெற்று மோசடி செய்தது தெரியவந்துள்ளது.இதனையடுத்து கரூர் ஏற்றுமதி நிறுவனத்தின் மேலாளர் அசித் அலி (34) கரூர் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவேணி வழக்குப்பதிவு செய்து மோசடி செய்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story