உரிமம் பெறாமல் உணவு பொருட்களை விற்பனை செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்
உரிமம் பெறாமல் உணவு பொருட்களை விற்பனை செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்.
கோத்தகிரி
நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின் பேரில், நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ் மற்றும் அலுவலர்கள் கோத்தகிரி மார்க்கெட், பஸ்நிலையம், ராம்சந்த் சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உணவுப் பொருட்களின் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதி அச்சிடப்பட்டு உள்ளதா? உரிய தரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட எடையுடன் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் உணவு பாதுகாப்பு உரிமம் பெறப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து பழக்கடைகளில் விற்பனை செய்யபடும் பழங்கள் கார்பைடு கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்டுள்ளதா எனவும் ஆப்பிள் பழங்களின் மேல் மெழுகு பூச்சு உள்ளதா, பழங்கள் தரமாக இருக்கிறதா என ஆய்வு செய்தனர். ஆய்வின் போது பஸ் நிலையத்தில் உள்ள 2 கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடைக்காரர்கள் 2 பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் அதிகாரிகள் கூறுகையில், உணவு பொருட்கள் விற்பனை செய்யும் அனைத்து கடை உரிமையாளர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் கட்டாயம் பெற வேண்டும். உரிமம் இன்றி உணவு பொருட்களை விற்பனை செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.