காதல் விவகாரத்தில் வாலிபரை கொல்ல ஆயுதங்களுடன் பதுங்கிய 5 பேர் கும்பல் சிக்கியது


காதல் விவகாரத்தில் வாலிபரை கொல்ல ஆயுதங்களுடன் பதுங்கிய 5 பேர் கும்பல் சிக்கியது
x
தினத்தந்தி 25 Nov 2022 6:45 PM GMT (Updated: 25 Nov 2022 6:47 PM GMT)

ஓட்டப்பிடாரம் அருகே காதல் விவகாரத்தில் வாலிபரை கொல்ல ஆயுதங்களுடன் பதுங்கிய 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே காதல் விவகாரத்தில் வாலிபரை கொல்ல ஆயுதங்களுடன் பதுங்கிய 5 பேர் கும்பல் போலீசார் ரோந்து சென்றபோது சிக்கினர்.

5 பேர் கும்பல்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகேசுவரன் தலைமையில், ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் நேற்று முன்தினம் மாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டப்பிடாரம் அருகே ஒசனூத்து சங்கரராஜபுரம் விலக்கு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற 5 பேர், போலீசாரைக் கண்டதும் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரித்தனர்.

காதல் விவகாரத்தில் முன்விரோதம்

விசாரணையில் அவர்கள், ஓட்டப்பிடாரம் அருகே குலசேகரநல்லூர் நடு தெருவைச் சேர்ந்த எட்டப்பன் மகன் முத்து மாரியப்பன் (வயது 23), கவர்னகிரி சுந்தரலிங்கம் நகரைச் சேர்ந்த முருகன் மகன் கார்த்திக் (28), பாளையங்கோட்டை சீவலப்பேரி மடத்துப்பட்டியைச் சேர்ந்த செல்வகணபதி மகன் சிவமுருகன் (22), தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காமராஜ் நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் முத்துராமன் (23), ஆறுமுகநேரி செல்வராஜபுரத்தைச் சேர்ந்த 19 வயது வாலிபர் என்பதும், இவர்கள் 5 பேரும் குலசேகரநல்லூரைச் சேர்ந்த வாலிபர் மாயகிருஷ்ணனை கொலை செய்வதற்காக பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது.

அதாவது முத்து மாரியப்பனுக்கும், மாயகிருஷ்ணனுக்கும் இடையே ஒரு பெண்ணை காதலிப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இதுதொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு முத்துமாரியப்பன், மாயகிருஷ்ணனை அரிவாளால் வெட்ட முயன்றார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துமாரியப்பனை கைது செய்து, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

வழிப்பறியில் ஈடுபட்டு...

பின்னர் கடந்த மாதம் 27-ந்தேதி சிறையில் இருந்து முத்து மாரியப்பன் வெளியே வந்தார். இதனை அறிந்த மாயகிருஷ்ணன், அவருடைய தந்தை உள்பட சிலர் முத்து மாரியப்பனை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த முத்து மாரியப்பன் போலீசாரிடம் தெரிவிக்காமல் மதுரைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

இதையடுத்து முத்துமாரியப்பன் பழிக்குப்பழியாக மாயகிருஷ்ணனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு கூட்டாளிகளுடன் சொந்த ஊரான குலசேகரநல்லூரில் ஆயுதங்களுடன் பதுங்கி உள்ளார். அப்போது அவர்கள், ஒருவரிடம் அரிவாளைக் காண்பித்து ரூ.5 ஆயிரம் பறித்துள்ளனர். மேலும் பலரிடம் வழிப்பறியில் ஈடுபட திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து முத்து மாரியப்பன் உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 3 அரிவாள்களையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story